பக்கம் எண் :

பக்கம் எண்:459

உரை
 
3. மகத காண்டம்
 
24. மேல்வீழ் வலித்தது
 
         
     160    கதுமென நிகழ்ந்த கலக்கமொடு கல்லென
            மதிதவழ் புரிசை வளநகர் கலங்கப்
            பெருமழை நடுவ ணிருளிடை யெழுந்ததோர்
            கடுவன் போலக் காவல னுரறி
            மகிழ்ச்சி யெய்தி மாற்றோ ரில்லெனும்
     165    இகழ்ச்சி யேதந் தலைத்ததெனக் கின்றெனக்
            கவலை கூராக் கலங்கின னெழவும்
 
                     (இதுவுமது)
             160 - 166 : கதுமென.........எழவும்
 
(பொழிப்புரை) இவ் வாரவாரத்தாலே ஞெரேலென்று தோன்றிய மனக் கலக்கத்தோடு கல்லென்று திங்கள் தவழா நின்ற மதிலையுடைய வளமிக்க அவ்வரண்மனைக்குள் வாழ்வோரனைவரும் கலங்காநிற்ப. நள்ளிரவிலே பெய்யாநின்ற பெரிய மழையினிடையே விழிப்புற்றெழுந்ததோர் ஆண்குரங்கு போல ஆருணி மன்னன் வாய்குழறி எழுந்து ''யான் பொச்சாப் பெய்தி, இனி எனக்குப் பகைவரில்லை என்று இகழ்ந்திருந்த குற்றம் இத்துன்பத்தை இப்பொழுது கொண்டு வந்தது'' என்று கவலை மிக்கு மனங்கலங்கிப் படுக்கையினின்றும் எழாநிற்பவும், என்க.
 
(விளக்கம்) கதுமென : விரைவுக் குறிப்பு. வளநகர் - வளமுடைய அரண்மனை. கடுவன் - ஆண்குரங்கு. இஃது ஆருணிக்கு உவமை. மழைக்காலத்தில் குரங்குகள் ஏனை உயிரினுங்காட்டில் பெரிதும் துன்புறும் இயல்பினையுடையன. ஆதலின் இங்ஙனம் உவமையெடுத்து ஓதினார். இகழ்ச்சி ஏதம் தலைத்தது - பொச்சாப்புத் துன்பத்தைக் கொணர்ந்தது. ''இகழ்ச்சியிற் கெட்டாரை யுள்ளுக தாந்தம், மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து'' (குறள். 539) என வருங் குறளையுங் காண்க. கூரா - மிகுந்து.