பக்கம் எண் :

பக்கம் எண்:46

உரை
 
3. மகத காண்டம்
 
3. இராசகிரியம் புக்க
 
         
           கோயில் கொட்டை யாகத் தாமரைப்
           பூவொடு பொலியும் பொலிவிற் றாகி
     110    அமையாச் செய்தொழி லவுணர்க கடந்த
           இமையாச் செங்க ணிந்திர னுறையும்
           அமரா பதியு நிகர்தனக் கின்றித்
           துன்ப நீக்குந் தொழிலிற் றாகி
           இன்பங் கலந்த விராச கிரியமென்
     115    றெண்டிசை மருங்கினுந் தன்பெயர் பொறித்த
           மன்பெருஞ் சிறப்பின் மல்லன் மாநகர்
           சாரச் சென்றதன் சீர்கெழு செல்வமும்
 
           (இதுவுமது)
    108 - 117 : தாமரை...............சாரச்சென்று
 
(பொழிப்புரை) ஒரு தெய்வத் தாமரை மலரைப்
  போன்றுபொலிகின்ற அழகினையுடையதாய் அறத்தொடு
  பொருந்தாத தீவினைத் தொழிலையுடைய அவுணர்களைக்
  கொன்ற இமையாத சிவந்த கண்களையுடைய இந்திரன்
  அரசுவீற்றிருக்கும் அமராபதி தானும் தனக்கு நிகரின்றித்
  தன்கண் வாழுமாந்தருடைய துன்பத்தை அகற்றுகின்ற
  ஆட்சித் தொழிலையுடையதாய் இன்பமே விரவிய
  இராசகிரியம் என்று எட்டுத் திசைகளிடத்தும் தனது
  புகழை நிலைநாட்டிய நிலைபெற்ற பெரிய சிறப்பினையும்
  வளத்தையு முடைய பெரிய நகரத்தை எய்தச் சென்று
  சேர்ந்தென்க.
 
(விளக்கம்) படைச்சேரி பொய்கையாகவும், அதன்கண்
  போகச்சேரி புறவிதழாகவும் கடியாளர் சேரி அப்புறவிதழ் மருங்கிற்
  புல்லிதழாகவும் வணிகர் சேரி அப்புல்லிதழ் பொருந்திய நல்லிதழ்
  ஆகவும் அந்தணர் சேரி அகவிதழாகவும் அமைச்சர் சேரி
  அல்லியாகவும் கோயில் கொட்டையாகவும் மலர்ந்ததொரு தாமரைப்
  பூப்போன்ற பொலிவுடைய இராசகிரியம் என்க-
  இதனோடு  'மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
            பூவொடு புரையுஞ் சீரூர் பூவின்
            இதழகத் தனைய தெருவ மிதழகத்
            தரும் பொகுட்டனைத்தே யண்ணல் கோயில்'
  என வரும் பரிபாடலையும் (பரிபாடல் - பின் சேர்க்கை)
         'நீனிற வுருவி னெடியோன் கொப்பூழ்
          நான்முக வொருவற் பயந்த பல்லிதழ்த்
          தாமரைப் பொகுட்டிற் காண்வரத் தோன்றிச்
          சுடுமணோங்கிய நெடு நகர்'
  எனவரும் பெரும்பாணாற்றுப் படையையும் (402-5) ஒப்பு நோக்குக.
  இனி ஆசிரியர் திருத்தக்கதேவரும்.
      ' பொய்கை. போர்க்களம் புறவிதழ் புலவு வாட்படை புல்லிதழ்
        ஐய கொல்களி றகவித ழரச ரல்லிதன் மக்களா
        மையில் கொட்டையம் மன்னனா மலர்ந்த தாமரை வரிசையாற்
        பையவுண்டபின் கொட்டைமேற் பவுத்திரத் தும்பி பறந்ததே'
  என ஈண்டுக் கூறியவாறே கூறுதலுங் காண்க. (சீவக. 2311)