பக்கம் எண் :

பக்கம் எண்:460

உரை
 
3. மகத காண்டம்
 
24. மேல்வீழ் வலித்தது
 
           எழுந்த மன்னன் செழும்பூ ணகலத்
           தீர்நறுஞ் சாந்தத் தாரொடு குழையப்
           பரத்தையர்த் தோய்ந்தநின் பருவரை யகலம்
     170    திருத்தகைத் தன்றாற் றீண்டுத லெமக்கெனப்
           புலவியி னடுங்கிப் பூப்புரை நெடுங்கண்
           தலையளிச் செவ்வியி னமர்ப்பன விமைப்ப
           ஆற்றா வனந்தரொ டசைந்த வின்றுயிற்
           கூற்றார்ப் பிசைப்பிதென் னென்றனள் வெரீஇ
 
                (பட்டத் தேவியின் கலக்கம்)
                167 - 174 : எழுந்த.........வெரீஇ
 
(பொழிப்புரை) இவ்வாறு கலங்கி எழுந்த மன்னனோடு முன்னிரவில் ''செழிப்புடைய அணிகலன்களையுடைய நின் மார்பிடத்தே பூசப்பட்ட குளிர்ந்த நறிய சந்தனம் மாலையோடு குழையும்படி பரத்தையரைச் சேர்ந்த நின்னுடைய பெரிய மலை போன்ற அம்மார்பினைத் தீண்டுதல் எமக்குச் செல்வமாந் தன்மையுடைத்தன்று என்று பிணங்கித் துன்பத்தால் நடுங்கி மலரையொத்த தன் நெடிய கண்கள் அம்மன்னன் தன்னைத் தலையளி செய்யும் செவ்வியில் ஒன்றோடொன்று போர் செய்வனவாய் இமைகளை மூடி ஆற்றாத மயக்கத்தோடு கிடந்த இனிய துயிலின் கண் இவ் வாரவாரத்தைக் கேட்டு இம்முழக்கம் கூற்றுவன் ஆரவாரமோ அன்றி வேறென்னையோ? என்று வினவியவளாய் அஞ்சி; என்க.
 
(விளக்கம்) ஈர்சாந்தம் நறுஞ்சாந்தம் எனத் தனித் தனி கூட்டுக. நின் என்றது அரசனை நோக்கி என்க. அவன் தலையளி செய்யும் செவ்வியில் என்க. ஆற்றாஅனந்தர் - பொறுக்கொணாத துயில் மயக்கம். வெரீஇ - அஞ்சி.