பக்கம் எண் :

பக்கம் எண்:463

உரை
 
3. மகத காண்டம்
 
24. மேல்வீழ் வலித்தது
 
           அருமணி திகழு மாய்பொன் மாடத்துத்
           திருமணிக் கட்டிற் பாகத் தசைந்த
           உழைக்கல மகளி ருள்ளழ லூர்தரக்
           குழைக்கணி கொண்ட கோல வாண்முகத்
     195    தரிபரந் தலமரு மச்சுறு கண்ணினர்
           வெருவுறு பிணையின் விம்மாந் தெழாஅப்
           பட்டதை யறியார் பகைப்புல வேந்தன்
           கெட்டகன் றனனான் மற்றி தென்னெனக்
           கோயின் மகளி ராகுலப் பூசலொடு
     200    வாயிலுந் தகைப்பு மறியார் மயங்கவும்
 
                (குற்றேவல் மகளிரின் துயரம்)
              191 - 200 : அருமணி.........மயங்கவும்
 
(பொழிப்புரை) பெறற்கரிய மணிகள் திகழாநின்ற அழகிய பொன் மாடத்தின்கண் அழகிய மணிகள் பதித்த கட்டிலின் பக்கத்தே இருந்த உழைக்கலமகளிர் தம்முள்ளத்தே ஞெரேலென வெப்பந் தோன்றி மிகாநிற்றலாலே, குழையினோடு அழகு கொண்ட ஒப்பனையுடைய தமது ஒளி முகத்தின்கண்ணே செவ்வரிபரந்து சுழலாநின்ற அச்சமிக்க கண்ணையுடையராய்ப் புலி முழக்கங் கேட்டு அஞ்சாநின்ற பிணைமான்கள் போன்று பொருமி எழுந்து ஆங்கு நிகழ்ந்ததனை இன்னதென் றறியாராய் ''நம்மன்னனுடைய பகைவேந்தனாகிய உதயணமன்னன்றானும் தன் வாழ்க்கைக் கெட்டுத் தன்னாட்டினின்றும் போய் ஒழிந்தனன். அங்ஙனமாகவும் இவ்வாறு ஆரவாரிப்போர் யார்கொலோ? என்று ஐயுற்றுத் துன்பந்தரும் அழுகையொலியோடே வெளியே செல்லுதற்குரிய வாயிலிஃது என்றும் இது சுவர் என்றும் அறியாதாராய்ப் பெரிதும் மயங்கா நிற்பவும் என்க.
 
(விளக்கம்) ஆய் - அழகிய. பாகத்து - பக்கத்தில். அசைந்த - தங்கியிருந்த. உழைக்கலமகளிர் - பக்கத்திலே இருத்தற்குரிய கலங்களை ஏந்தி நிற்கும் பணிமகளிர். குழைக்கு : வேற்றுமை மயக்கம். அரி - செவ்வரி. அலமரும் - சுழலும். அச்சுறும் - அஞ்சும். புலிமுழக்கங்கேட்டு வெருவுறும் பிணையென்க. விம்மாந்து - பொருமி. பட்டதை -நிகழ்ந்ததனை. பகைப்புல வேந்தன் என்றது உதயணனை. வாழ்வு கெட்டு நாட்டை விட்டகன்றனன் என்றவாறு. இது - இவ்வாரவாரம். தகைப்பு - சுவர்.