பக்கம் எண் :

பக்கம் எண்:464

உரை
 
3. மகத காண்டம்
 
24. மேல்வீழ் வலித்தது
 
            நகர மெல்லா முழுவது மறிந்து
            திருவார் மார்பினெம் பெருமா னுதயணன்
            கூற்றிடம் புக்கு மீட்டும் வந்தனன்
            நம்பொருட் டாக நகர முற்றனன்
     205    அமைச்சருந் தானு மமைத்த கருமம்
            முடித்தன னாகலின் முற்றவ முடையம்
            அன்றியீன் வாரா னாதலி னெங்கோன்
            வென்றி யெய்துதல் வேண்டுது நாமென
            வெருப்பறை கொட்டி யுருத்துவந் தீண்டி
     210     நமக்குப்படை யாகி மிகப்புகுந்தெற்றவும்
 
                  (நகரத்தார் மகிழ்ச்சி)
              201 - 210 : நகரம்.........எற்றவும்
 
(பொழிப்புரை) இனி, நம்படைஞர் ஆரவாரத்தைக் கோசம்பி நகரத்திலே வாழாநின்ற நம்பழங்குடி மக்கள் அனைவரும் அறிந்து ''திருமகள் வதிகின்ற மார்பினையுடைய எங்கள் வேந்தனாகிய உதயணன் கூற்றுவன் கையிலகப்பட்டவன் மீண்டும் ஆகூழாலே இந்நகரத்திற்குப் பெரும்படையோடு நம்மைப் பாதுகாத்தற் பொருட்டாக வந்தெய்தினன். சிறந்த தன் அமைச்சரும் தானும் நெடுநாள் ஆராய்ந்து துணிந்த செயலைச் செய்து முடித்தனன். ஆகவே நாமெல்லாம் முற்பிறப்பிலே செய்தவம் பெரிதும் உடையேம் ஆதல் வேண்டும். அவ்வாறு தன் பகைவனை வென்று இந்நகரத்தைக் கைப்பற்றுதற்குச் செய்ய வேண்டிய செயலெல்லாம் செய்திரானாயின் இவ்வாறு இந்நகரத்திற்குப் படையொடும் வருவானல்லன். ஆகவே யாமெல்லாம் நம்பெருமான் தன் பகைவனை யழித்து வெற்றி கொள்வதனையே பெரிதும் விரும்புவேம்!'' என்று தம்முட் கூடித் துணிந்து ஆருணி மன்னன் அஞ்சுதற்குக் காரணமான போர்ப் பறையினை முழக்கிக் கொண்டு சினந்து வந்து நமக்குத் துணைப்படையாகி நம் பகைவன் படையைத் தாக்கி ஆங்காங்கே கொன்று குவியா நிற்பவும் என்க.
 
(விளக்கம்) நகரம் : ஆகுபெயர். திரு - திருமகள். கூற்றிடம் புக்கு மீட்டு வந்தனன் என்றது, இறந்தொழிந்தாற் போன்றதொரு நிலைமையினை எய்தி ஒருவாறு உய்ந்து வந்தனன் என்றவாறு. நம் பொருட்டாக நகரமுற்றனன் என்றது உதயணனுடைய காவற்றொழிற் சிறப்பைப் பாராட்டிக் கூறியபடியாம். அமைத்த கருமம் - தன் பகைவனை வெல்லுதற்கென ஆராய்ந்து துணிந்த செயல். ஈன் - இவ்விடம் : வெருப்பறை - அஞ்சுதற்குக் காரணமான போர்ப்பறை உருத்து - சினந்து. ஏற்றவும் - தாக்கவும்.