(பொழிப்புரை) நம்பகைமன்னனுக்கு இத்தகைய இன்னல்கள்
பலவும் உண்டாகவும் யாம் அவ்வாருணி மன்னன் உயிரினைக் குடிப்பேமாக! இதற்குப் பெருமான்
உடன்பட்டருளுக! என்று வருடகாரன் ஆராய்ந்து கூறாநிற்ப அவ்வமைச்சன் கூறிய செய்கை
முறையினை உதயண மன்னனும் கூர்ந்துணர்ந்து மகிழ்ந்து ''இச்செயன் முறை பெரிதும்
பொருத்தமுடையதே'' என்று கூறி அங்ஙனமே செய்தற்கு உடன்பட்டவனாக, இவ்வாறு பறவையும்
பயிலுதற்கியலாத தொரு பளிக்கறையினுள்ளிருந்து அமைச்சர்கள் பிடரிமயிராலே பொலிவுடைய
குதிரை பூண்ட தேரையுடைய அவ்வுதயணமன்னனோடே ஆராய்ந்து பகையரசன் அரண்மனையை
முற்றுகையிடுதற்கு மறைபுறப்படாத அடக்க முடையராயிருந்து துணிவாராயினர்
என்க.