உரை |
|
3. மகத காண்டம் |
|
25. அரசமைச்சு |
|
ஆண்டகை யமைத்துப்
பாம்புரி
திருத்தி
அருஞ்சுழி நீத்தத் தாறுபுக வமைத்த
சுருங்கை வாயிற் பெருங்கத
வொடுக்கிக் 20 கொடுந்தாழ்
நூக்கி நெடும்புணை களைந்து
நீணீர்க் கிடங்கிலுட் டோணி
போக்கிக்
கல்லிடு கூடை பல்லிடத்
தியற்றி
வில்லுடைப் பெரும்பொறி பல்வழிப்
பரப்பிப்
|
|
(இதுவுமது) 17
- 23 : ஆண்டகை ... ... ... பரப்பி
|
|
(பொழிப்புரை) ''ஆண்டகையமைத்து (?) பாம்புரியைச் சீர்திருத்திக் கடத்தற்கரிய
சுழியினையுடைய வெள்ளத்தையுடைய யாற்றிற் சென்று புகும்படி அமைத்துள்ள சுருங்கையினது பெரிய
கதவுகளைச் சாத்தி வளைவுடைய தாழக்கோலைச் செறித்திட்டு நெடிய நீரையுடைய அகழியின்கட்
கிடந்த நெடிய தெப்பங்களை அகற்றிச் சிறிய தோணிகளையும் ஒழித்து எறிகல் நிரப்பிய
கூடைகளைப் பல்வேறிடங்களினும் அமைத்துவைத்துப் பெரிய விற்பொறிகளைப் பலவழிகளினும்
பரப்பி வைத்து'' என்க.
|
|
(விளக்கம்) ஆண்டகை : இதன் பொருள் விளங்கவில்லை. ஒரு மதிலுறுப்பு என்று
ஊகித்தற்கிடனுண்டு. ஆராய்ந்து கொள்க. பாம்புரி - மதிலின் புறத்தேயுள்ள ஆளோடி.
ஆற்றிற் சென்று புகும்படி அமைத்த சுருங்கை என்க. சுருங்கை - நீரோடுதற்கு மறைத்தமைத்த
கற்படை. புணை - தெப்பம். தோணி - ஒரு மரத்தோணி. கிடங்கில் - அகழி. நீள்
கிடங்கில், நீர்க்கிடங்கில் எனத் தனித்தனி கூட்டுக. கல்லிடு கூடை - பகைவரை
எறிகின்ற கற்களை நிரப்பி வைத்திருக்கும் கூடை. ''காய் பொன்னுலையுங் கல்லிடு
கூடையும்'', என்றார் இளங்கோவும் (சிலப். 15 : 120.) வில்லுடைப் பெரும் பொறி -
பெரிய விற்பொறி.
|