பக்கம் எண் :

பக்கம் எண்:470

உரை
 
3. மகத காண்டம்
 
25. அரசமைச்சு
 
           பற்றறத் துறந்த படிவத் தோரையும்
     25    அற்ற மின்றி யாராய்ந் தல்ல
           தகம்புக விடாஅ திகந்துசே ணகற்றி
           நாட்டுத் தலைவரை நகரத்து நிறீஇ
           நகர மாந்தரை நாட்டிடை நிறீஇ
           ஊரூர் தோறு முளப்பட் டோவா
     30    ஆர்வ மாக்களை யருஞ்சிறைக் கொளீஇ
 
                  (இதுவுமது)
          24 - 30 : பற்றற ......... கொளீஇ
 
(பொழிப்புரை) உலகப் பற்றினைத் துவரத் துறந்த தவவேடமுடையோரையும் சிறிதும் சோர்வின்றி ஆராய்ந்து உட்புகவிடுவதல்லது ஆராயா வழி உட்புகவிடாது அகன்று போம்படி சேய்மைக்கண் போக்கி ஊராட்சித் தலைவர்களை நகராளும்படி நிறுத்தி வைத்தும், நகரத்து வாழும் பெருங்குடி மக்களை ஊர்களை ஆளும்படி ஊர்தோறும் நிறுத்தி வைத்தும், ஊர்தோறும் ஊர்தோறும் நம்பால் உளம் வைத்து அன்பொழியாத நன்மக்களையெல்லாம் ஆராய்ந்து அறிந்து கடத்தற்கரிய சிறைக் கோட்டத்தே இட்டு,'' என்க.
 
(விளக்கம்) பற்று - உலகப்பற்று. துறந்த படிவத்தோர் - தவ வேடம் கொண்டோர். படிவத்தோரையும் என்புழி உம்மை உயர்வு சிறப்பு. அற்றம் - சோர்வு. நாட்டுத் தலைவரை நகரத்தும், நகர மாந்தரை நாட்டுத்தலைவராகவும் மாற்றியது. தலைவரும் குடிமக்களும் விரைந்து ஒன்றுபடாமைப் பொருட்டென்க. உளப்பட்டு - நமக்குடன் பட்டு; ஆர்வம், ஓவாமாக்களை என்க.