பக்கம் எண் :

பக்கம் எண்:471

உரை
 
3. மகத காண்டம்
 
25. அரசமைச்சு
 
           ஆணை கேட்ட வகலிடத் தெல்லாம்
           ஓலை போக்கி யொல்லைவந் தியைகெனப்
           பேணார்க் கடந்த பிரச்சோ தனற்கு
           மாணாச் செய்தொழின் மனமுணக் காட்டி
     35    அலமதித் தொழுகி யாணை யெள்ளி
           மிகைசெய் திருந்ததன் மேலு மீட்டினி
           மகத மன்னனு மதுகை யாகப்
           பகைசெய வலித்தன னென்பது பயிற்றி
           மந்திர வோலை போக்கிய வண்ணமும்
 
                   (இதுவுமது)
          31 - 39 : ஆணை ......... வண்ணமும்
 
(பொழிப்புரை) தன் ஆணைக்கடங்கிய குறுநிலமன்னர் வாழாநின்ற அகன்ற நாடுகட்கெல்லாம் ''நீயிர் விரைந்து எம்பால் வருக'' என்று ஆணை பொறித்த திருவோலைகளைத் தூதுவர் வாயிலாய் விடுத்து, மேலும் தன் பகைவரையெல்லாம் போரின் கண் வென்று வாகை சூடிய பிரச்சோதன மன்னராகிய நின் மாமடிகளார்க்கும் மனங்கவரும்படி நின்னுடைய செயல்களாகப் பல தீச்செயல்களைப் படைத்து மொழிந்து, அவற்றின் மேலும், 'அவன் நின்னைப் பெரிதும் பழித்துத் திரிதலேயன்றி நின்னுடைய கட்டளையையும் இகழ்ந்து மிகையான செயல் பலவற்றைச் செய்து கொண்டிருப்பதோடன்றி மீண்டும் இப்பொழுது புதுவதாக உறவு பூண்ட மகத மன்னனாகிய தருசக மன்னனுடைய படைவலிமையையே தனதாகக் கொண்டு (என்னைப் பகைப்பதோடன்றி) நின்னையும் பகைத்தற்கும் துணிந்துளான்'' என்றும், பல்லாற்றானும் அறிவுறுத்தி மந்திரவோலை விடுத்த செய்தியையும், என்க.
 
(விளக்கம்) ஆணைகேட்ட இடம் என்றது குறுநிலமன்னர் இடங்களை. ஒல்லை - விரைந்து. அவமதித்தொழுகி ''ஆணையெள்ளி மிகை செய்திருந்தது'' என்றது உதயணன் வாசவதத்தையைக் கைப்பற்றி வந்ததனை மீண்டும் நினைவூட்டியவாறென்க. முன்னரே நினக்கு அவன் பகைவன் என்பான் 'மீட்டினிப் பகை செயவலித்தனன்' என்றான். மந்திரவோலை - மறைச்செய்தியையுடைய ஓலை.