உரை |
|
3. மகத காண்டம் |
|
25. அரசமைச்சு |
|
40 வெந்திறல் கலந்த
விறல்வே சாலியொடு
சங்க மன்னர்க்குத் தம்படை
கூட்டி
விரைந்தனர் வருகென நினைந்துவிட்
டதுவும்
மன்னடு நெடுவேன் மகத
மன்னற் கின்னது
தருவே னென்னொடும் புணர்கெனத் 45
தன்னொடு பழகிய தமர்களை
விட்டதும்
இன்னவை பிறவும் பன்னின
பயிற்றிய
அறிந்தவொற் றாளர் செறிந்தன ருரைப்ப
|
|
(இதுவுமது) 40
- 47 : வெந்திறல்.........உரைப்ப
|
|
(பொழிப்புரை) வெவ்விய போராற்றலுடையோனும் தன்னோடு நட்புரிமை கொண்டவனுமாகிய
வேசாலியுள்ளிட்ட சங்கமன்னர் எண்மரும் தத்தம் படைகளைத் திரட்டிக் கொண்டு விரைந்து
வருக என்று அவர்தாம் (உதயணனுக்குப்) பகைவராதலை நினைந்து தூது போக்கியதும்,
பகையரசர்களைக் கொல்லும் ஆற்றல் பெற்ற தருசகமன்னனுக்கும் நீ என்னோடு கேண்மை
கொள்குவையாயின் இன்ன நாட்டினை நினக்குத் தருகுவேன் என்று சொல்லித் தன்னோடு மிகவும்
பழகிய உறவினர்களை அவன்பால் விடுத்ததும் இன்னோரன்ன தாமே ஆராய்ந்த செய்திகளையும்,
பிறர் தமக்குக் கூறிய செய்திகளையும் பிறவற்றையும் அறிந்து வந்த அவ்வொற்றர்
நெருங்கி வந்து கூறாநிற்ப, என்க.
|
|
(விளக்கம்) வேசாலி - சங்கமன்னருட் டலைசிறந்த ஒரு மன்னன்; ''தானை மன்னரை
மானம் வாட்டிய ஊனிவர் நெடுவேல் உருவக் கழற்காற் பொங்கு மயிர் மான்றேர்த்
திருநகர்க்கிறைவன் வெந்திறற் செய்கை வேசாலி'' என முன்னும் வருதல் (3. 17 ;
33 - 6) காண்க. நினைந்து என்றது உதயணனுக்கு அவர் பகைவராதலை நினைந்து என்பதுபட
நின்றது. மன் - பகை மன்னர். மகதமன்னன் என்றது தருசகனை. பன்னின - தாமே ஆராய்ந்து
கண்ட செய்திகள். பயிற்றிய - பிறர் தமக்குக் கூறிய செய்திகள். செறிந்தனர் -
அருகில் வந்து.
|