பக்கம் எண் :

பக்கம் எண்:473

உரை
 
3. மகத காண்டம்
 
25. அரசமைச்சு
 
           ஒற்று மாக்களை யொற்றரி னாயா
           முற்றனக் குரைத்த மூவர் வாயவும்
     50    ஒத்தது நோக்கி மெய்த்தகத் தேறி
           இரவே றொளித்துச் செருமேந் தோன்ற
           வளைத்திருந் தழிக்குவ மெனினே மற்றவன்
           வலித்தது நாடி நலத்தகு நண்பின்
           மிலைச்ச மன்னருங் கூடித் தலைத்தலை
     55    வந்தவ னிதிப்பயங் கருதி முந்துற
           முற்றுபு விடுப்பி னற்ற மீனும்
 
           (உதயணன் வருடகாரனுக்குக் கூறுதல்)
                48 - 56 : ஒற்று.........ஈனும்
 
(பொழிப்புரை) இவ்வாறு, பகைப்புலத்தே சென்று ஒற்றி வந்து கூறிய அவ்வொற்றர்களை உதயணன் வேறு ஒற்றரானும் ஆராய்ந்துணர்ந்து முன்னர்த் தனக்குக் கூறிய மூன்று ஒற்றர்களுடைய செய்திகளும் தம்முள் முரணுதலின்றி ஒத்திருத்தலை உணர்ந்து அச்செய்திகள் வாய்மையே என்று தெளிந்து வருடகாரனை நோக்கி ''நண்பனே! யாம் போரின்கண் மேம்பாடுறுதற் பொருட்டு இரவின்கண் ஒளிந்து சென்று ஆருணியரண்மனையை முற்றுகையிட்டு உட்புகுந்து மாற்றலரை அழிப்பேமாயின், அம்மன்னன் துணிந்துள்ள செய்தியை அவ்வாருணியரசனுக்கு நலந்தரும் நண்பினையுடையோராகிய மிலைச்ச மன்னர் தாமும் ஆராய்ந்துணர்ந்து அம்மன்னன் தமக்கு வழங்கும் பெரும் பொருட் பொருட்டாய் ஆங்குவந்து அவனொடு கூடி நமக்கு முற்பட அவ் வரண்மனையைச் சூழ்ந்திருந்து அவ்வாருணியைப் பாதுகாத்து விடுப்பின் அந்நிகழ்ச்சி நமக்குப் பெரிதும் சோர்வு தருவதொன்றாமன்றோ'' என்க.
 
(விளக்கம்) ''ஒற்றொற் றுணராமை யாள்க வுடன்மூவர், சொற்றொக்க தேறப் படும்'' என்பது திருக்குறள் (579) ஆயா - ஆய்ந்து. வாயவும் - வாய் மொழிகளும். இர - இரவு. செருமேந்தோன்ற - போரில் மேம்பாடுறற் பொருட்டு. மிலைச்சமன்னர் பலராதல் தோன்றத் தலைத்தலை வந்து என்றார்.