உரை |
|
3. மகத காண்டம் |
|
25. அரசமைச்சு |
|
65 ஆசில் செங்கோ
லவந்தியன் மடமகள்
வாசவ தத்தையை வலிதிற்
கொண்ட
மேனாட் காலை யானே
யவனைப்
பற்றுபு நம்பதி தருகுவே
னென்றசொல்
முற்றுல கெல்லா மொய்த்தொருங்கு
தருதலின் 70 வத்தவ மன்னனு
மெய்த்தகக் கேட்டுக்
கனலிரும் புண்ட நீரின்
விடாது மனவயி
னடக்கி மறைந்தன னொழுகித்
தன்குறை முடிதுணைத் தானரு
டோற்றி
நன்கினி துரைக்குமவ னுரைக்கு மாயினும்
|
|
(இதுவுமது) 65
- 74 : ஆசில்.........உரைக்கும்
|
|
(பொழிப்புரை) ''நீ அப்பகைப் புலத்தார்க்கு நின் அரசன் தருசகனுடைய
வாய்மொழியாக இவ்வாறு கூறுக : மணிகள் பதித்த அழகிய பசிய அணிகலன்களையணிந்த மகத
மன்னனாகிய தருசகன் (78) அமைச்சனே ! குற்றமற்ற செங்கோன்மையையுடைய அவந்தியரசனாகிய
பிரச்சோதன மன்னனுடைய இளமகள் வாசவதத்தையை அவ்வுதயணமன்னன் வலிந்து கைப்பற்றிக்
கொண்ட முன்னாளிலே அங்ஙனம் அம்மன்னனுக்குப் பழியுண்டாக்கிய உதயணனை யானே சென்று
சிறைப்பிடித்துக் கொண்டு நம்முடைய இவ்விராசகிரிய நகரத்திற்குக் கொணர்வேன் என்று
யான் சொல்லிய சொல் உலகமுழுவதும் பரவிய காலத்தே, அவற்றைத் தன் ஒற்றர்கள் கேட்டு
ஒரு சேரக் கூறினராக அவ்வுதயண குமரனும் அவருரையை மெய்யென்று கேட்டு உலையில் வெந்த
இரும்பு தான் உண்ட நீரைப் பின் வெளிவிடாததுபோன்று அச்செய்தியைத் தன்மனத்தினுட்
கொண்டு அது வெளிப்படாமல் அடக்கி நம்மிடத்து வஞ்சகமாய்த் தன் காரியம் முடியுமளவும்
தனது அன்பினை வெளிப்படுத்தி ஒழுகுவானாயினான்; ஆதலின் அவன் நம்மிடத்தே பேசும்
பொழுதெல்லாம் நன்கு இனிதாகவே மொழிகின்றனன்'' என்க.
|
|
(விளக்கம்) ஆசு - குற்றம். அவந்தியன் - அவந்தி நாட்டரசனாகிய
பிரச்சோதனன். மடமகள் - இளமகள் ; மடப்பமுடைய மகளுமாம். மேனாள் - அந்நிகழ்ச்சி
நிகழ்ந்த முன்னாள். அவனை - அங்ஙனம் பழிச் செயல் செய்த உதயணனை என்க. பற்றுபு -
பற்றி. அப்பிரச்சோதனன் நம்முறவினன் ஆதலின் அவனுக்குச் செய்த தீமை நமக்குச்
செய்ததாகவே யான் கருதியதனால், நம்பதி தருகுவேன் என்று கூறினேன் என்பது கருத்து. உலகு -
உலகில் வாழ்மாந்தர். மொய்த்து - மொய்ப்ப - பரவ ; ஒற்றர் தருதலின் என்க.
இரும்புண்ட நீரின் - வெந்த இரும்புண்ட நீரை அவ்விரும்பு வெளிவிடாதது போல என்க.
மறைந்தனன் - மறைத்தனன். தன் குறை - தன் காரியம். முடி துணை - முடியுமளவும். தான் :
அசையுமாம்.
|