பக்கம் எண் :

பக்கம் எண்:477

உரை
 
3. மகத காண்டம்
 
25. அரசமைச்சு
 
           அன்னவன் மதித்துத் தன்மிகத் தருக்கும்
           பெருமீக் கூற்றமும் பேணான் பிறரொடு
           செருமீக் கூற்றமுஞ் செய்கையும் வேண்டாம்
     85    ஒருதலை யாக வாற்றலன் மற்றிவண்
           பழிதலை நம்மேல் வருதலு மின்றி
           நாமு மெண்ணி விட்டன மாகத்
           தானே சென்று தன்வலி யறியான்
           அழியினு நமக்குக் கழிவதொன் றில்லை
 
                   (இதுவுமது)
          82 - 89 : அன்னவன்.........இல்லை
 
(பொழிப்புரை) மீண்டும் அவ்வுதயணன் வருடகாரனை நோக்கி ''நண்பனே ! இன்னும் இம்மொழிகளையும் நீ நின் அரசன் கூற்றாகவே அப்பகைவரிடத்துக் கூறுக!'' என்று அறிவுறுத்துபவன், ''வருடகார ! கேள் அவ்வுதயணன் தன்னைத்தானே பெரிதும் மதித்துக் கொண்டு மிகவும் செருக்குற்றிருக்கின்றான். அதனால் பெரியோருடைய மேலான மொழிகளையும் பேணுகின்றிலன். போர்வெல்லுதற்குக் காரணமான உறுதிமொழியினையும் அதற்கேற்ற செயல்களையும், நம்மோடிருந்து ஆராய்தலை விரும்புகின்றிலன். தானே துணிந்து செய்யும் செயல்களையும் உறுதியாகச் செய்கின்றிலன். எனவே அவன் கெடுதல் ஒருதலை. அங்ஙனம் கெட்டுழிப் பழி நம்மேல் வருதலுமில்லாமல் நாமும் ஆராய்ந்து அவன் வழியே செல்க'' என்று யாமும் துணிந்து விட்டுவிட்டேம். அவன் தான் செல்லும் வழியிற்றானே சென்று தன் வலியை அறியாதவனாய்த் தன்பகைவரால் அழியுமிடத்தும் நமக்குக் கேடொன்றும் இல்லை. ஆதலின்'' என்க.
 
(விளக்கம்) அன்னவன் : அவ்வுதயணன். பிறர் என்றது நம்மனோராகிய பிறர் என்றவாறு, செருமீக் கூற்றம் - போர்க்குக் காரணமான மிகைச் சொற்களுமாம். ஒரு தலையாக - உறுதியாக நம்மேல் பழிவருதல் இல்லாமைப் பொருட்டு என்க. நாமும் எண்ணி அவன் வழியே விட்டனம் என்க. ஆதலின் அவன் அழியினும் நமக்கு அழிவது ஒன்றில்லை என்றவாறு.