பக்கம் எண் :

பக்கம் எண்:479

உரை
 
3. மகத காண்டம்
 
25. அரசமைச்சு
 
          மெய்யெனத் தெளிந்து மீட்டவன் விட்ட
          கரும மாக்களை யொருவயி னோம்பிச்
    100    செறியச் செய்தெமக் கறிய விடுக்கபின்
          பற்றிக் கொண்டு பற்றா மன்னன்
          ஒற்ற ரிவரென வுரைத்தறி வுறீஇக்
          குற்றங் காட்டிக் கொலைக்கடம் பூட்டுதும்
 
                  (இதுவுமது)
            98 - 103 : மெய்.........பூட்டுதும்
 
(பொழிப்புரை) வருடகார! அவ்வாருணி மன்னன் நீ விடுத்த செய்திகளை மெய்யென்றே தெளிந்து மீண்டும் அவன் நின்பால் விடுத்த தொழிலாளர்களை அழைத்துக்கொண்டுவந்து ஓரிடத்தே வைத்துப் பாதுகாத்து நெருங்கியிருக்கச் செய்து அச்செயலை யாம் அறியும்படி தூதுவரை விடுப்பாயாக. யாம் அறிந்தபின் நமர்களைக்கொண்டு யாம் அவர்களைச் சிறையாகப் பிடித்துக் கொண்டுவந்து இவர் நம் பகைமன்னனாகிய ஆருணியினுடைய ஒற்றராவர் கண்டீர்! என்று கூறி நம் படைத்தலைவர் முதலியோர்க்கு அறிவுறுத்தி ஒரு குற்றத்தை அவர் மேலேற்றி அவரைக் கொலை செய்யும் கடமையை மேற்கொள்வாம்''; என்க.
 
(விளக்கம்) கருமமாக்கள் - வினைசெய்யும் மாக்கள். எமக்குத் தூது விடுக்க என்க. பற்றாமன்னன் : ஆருணி. நம் படைத்தலைவர் முதலியோர்க்கு அறிவறீஇஎன்க. கொலைக்கடம் - கொலைசெய்தலாகிய கடமை.