பக்கம் எண் :

பக்கம் எண்:48

உரை
 
3. மகத காண்டம்
 
4. புறத்தொடுங்கியது
 
           உள்ளுத லானா துள்ளகஞ் சுருங்கிய
           வள்ளிதழ் நறுந்தார் வத்தவன் றன்னொடு
           விண்ணுற நிவந்த பண்ணமை படைமதில்
           வாயிலு மருங்கிலுங் காவல் கண்ணி
     5     வேந்துபிழைத் தொழுகினுங் காய்ந்து கலக்கறா
           முழுப்பரி சார முதற்க ணெய்தி
           விழுப்பெருஞ் செல்வமொடு வென்றி தாங்கிய
           ஐம்பதி னிரட்டி யவனச் சேரியும்
           எண்பதி னிரட்டி யெறிபடைப் பாடியும்
    10     அளப்பருஞ் சிறப்பி னாயிர மாகிய
           தலைப்பெருஞ் சேனைத் தமிழச் சேரியும்
           கொலைப்பெருங் கடுந்திறற் கொல்லர் சேரியும்
           மிலைச்சச் சேரியுந் தலைத்தலை சிறந்து
 
              (இராசகிரிய நகரத்துச் சேரிகள்)
               1 - 13 : உள்ளுதல்............சிறந்து
 
(பொழிப்புரை) வாசவதத்தையை நினைந்துருகுதல் தவிராது ஊக்கங்
  குன்றிய பெரிய நறிய மலர்மாலையையுடைய வத்தவ மன்னனாகிய
  உதயணனோடு சென்ற உருமண்ணுவா முதலிய தோழர்கள் வானுற
  உயர்ந்த ஒப்பனையையும் பலபடைகளாலாய மதில் வாயிலையும்
  மாடவாயிலையும் பக்கங்களையும் காவல் செய்தலைக் கருதி அமைந்த
  தம்மன்னன் தம்பால் தவறி நடந்தாலும் அவனுடைய பகைவரைச்
  சினந்து தாக்குதல் ஒழியாத முழுமையான வழிபாட்டுத் தொழிலின்கண்
  முதலிடம் பெற்று மிகவும் சிறந்த செல்வத்தோடே வெற்றியையும் பெற்ற
  ஒரு நூறு யவனச் சேரியும், நூற்றறுபது வேல் முதலிய எறிபடை
  ஏந்திய மறவர் வாழும் சேரியும், .அளத்தற்கரிய வெற்றிச் சிறப்போடு
  தலைமைத் தன்மையும் உடைய படை மறவராகிய தமிழர் வாழும்
  ஓராயிரம் சேரியும், கொலைத் தொழிலில் பேராற்றல் வாய்ந்த
  கொல்லருடைய ஓராயிரஞ் சேரியும், மிலைச்ச மறவர் வாழும் ஓராயிரம்
  சேரியும் ஆங்காங்குச் சிறப்புற்றமைந்து என்க.
 
(விளக்கம்) உள்ளம்-ஊக்கம். வத்தவன்-உதயணன். படை-
  சுவரின் உறுப்பு. கண்ணி - கருதி; கருதியமைந்த சேரி என்க. வேந்து
  தம்பெருமை பேணாது ஒழுகினும் தங்கடமை தவறாமல் பகைவரைக்
  காய்ந்து கலக்கும் யவனர் என்க. பரிசாரம் - வழிபாடு. யவன நாட்டு
  மறவர் உறையுஞ் சேரி. எறிபடை - எறியும் வேல் முதலியன ஏந்தும்
  மறவர் என்க. ஆயிரமாகிய என்பதனைக் கொல்லர் சேரிக்கும் மிலைச்சர்
  சேரிக்கும் கூட்டுக. கொல்லர் வேல் முதலியன வடிக்குந் தொழிலோடு
  போர்த் தொழிலும்  சிறந்தவர் என்பது தோன்றக் கொலைப்
  பெருந்திறற் கொல்லர் என்றார். தலைத்தலை- இடந்தோறும் இடந்தோறும்.