பக்கம் எண் :

பக்கம் எண்:480

உரை
 
3. மகத காண்டம்
 
25. அரசமைச்சு
 
          தெற்றென நின்வயிற் றெளிந்தன ராகி
   105    உறுபெரும் பகைமை யுற்றோ ருணர்ந்து
         செறிவுகொள் வதற்குச் சென்றன ரிசைப்ப
         இதுகா ரணத்தி னிகத்தல் பொருந்தும்
         அதுகா ரணத்தின் யாமுந் தெளிவேம்
         பாரப் பண்டியும் பாடிக் கொட்டிலும்
   110    ஆரெரி கொளீஇ யஞ்சினே மாகி
         மலையர ணல்லது நிலையர ணில்லெனத்
         தவதி சயந்தம் புகுதும் புக்கபின்
 
                   (இதுவுமது)
            104 - 112 : தெற்றென.........புக்கபின்
 
(பொழிப்புரை) அங்ஙனம் நின்னுடைய நண்பர்களை யாங்கள் கொண்டுழி அப்பகைப்புலத்தார் நினக்கும் எனக்கும் உள்ள பெரும் பகையை உணர்ந்து கொண்டவராய் விரைந்து நின்பால் தெளிவுடையராகி இச்செய்தியை யறிந்து நம்மோடு நெருங்கிப் போர் செய்யும் பொருட்டு தம்மரசன்பாற் சென்று கூறாநிற்பர். இக்காரியங் காரணமாக நீ எம்மினின்றும் பிரிந்திருத்தல் பெரிதும் பொருந்துவதொன்றாம். மேலும் அவ்வொற்றர் காரணமாகவே யாங்களும் பகைவர் வரவினைத் தெளிந்து கொண்டேம் போலவும், சுமையேற்றப்பட்ட வண்டிகளையும் எமது பாசறைக் கொட்டில்களையும் அவித்தற்கரிய தீயினைக் கொளுவி விட்டு அப்பகையரசனுக்கு அஞ்சினேம் போல ஆகி அப் பகைவர்க்குத் தப்பி உயிர் வாழ்தற்குமலைகளே அரணாவதல்லது வேறு நிலையாய அரண்கள் இல்லையென்று அப்பகைவன் கருதும்படி யாங்கள் 'தவதிசயந்தம்' என்னும் மலைசெறிந்த இடத்திற் புகுவேம். அங்ஙனம் யாங்கள் அம்மலையரண் எய்திய பின்னர்; என்க.
 
(விளக்கம்) தெற்றென - விரைய, நின்வயின் - நின்பால். உற்றோர் - ஆருணியின் நண்பராகிய அப்பகைப் புலத்தார் என்க. உற்றோர் நினக்கும் எனக்கும் உறுபெரும் பகைமையுணர்ந்து நின்வயின் தெளிந்தனராகிச் சென்றனர்; செறுவு கொள்வதற்கு இசைப்ப என மாறிக் கூட்டுக. இது - இச்செயல். இகத்தல் பொருந்தும் - நீ எம்மைப் பிரிந்திருத்தல் அப்பகைவர்க்குப் பொருத்தமாகத் தோன்றும். அதுகாரணத்தின் - அப்பகைவர் வரவு காரணமாகக்கொண்டு என்க. தெளிவேம் - தெளிவேம்போல. பாரப்பண்டி - சுமையேற்றிய வண்டி. பாடிக் கொட்டில் - பாசறை வீடு. ஆரெரி - அவித்தற்கரிய நெருப்பு. அஞ்சினேம்போல ஆகி என்க. தவதி சயந்தம் : ஒரு குறிஞ்சி நிலப்பகுதி.