உரை |
|
3. மகத காண்டம் |
|
25. அரசமைச்சு |
|
மிகுதி யச்ச மீட்டவற்
குணர்த்தி வருக
வேந்தன் பெருவிறல் பீடறக் 115
கலக்கப் பொழுதே கடிது நாமென
விலக்க நில்லா வேட்கைய
னாகித் தான்புறப்
படுதலிற் றன்னே போலும்
மாண்புறு வேந்தரை மதிலகத்
தொழித்துப் புறமதிற்
கண்ணும் பொருபடை நிறீஇ 120 எறிபடை
சிறிதினொடணுகிய பின்றைச்
|
|
(இதுவுமது)
113 - 120 : மிகுதி.........பின்றை |
|
(பொழிப்புரை) ''அப்பொழுது எங்களுடைய மிக்க அச்சத்தை மீண்டும் அவ்வாருணி
மன்னனுக்கு எடுத்துக்காட்டி ஆருணி வேந்தன் இப்பொழுதே போர்க்கு எழுந்து வருக! அவ்வுதயண
மன்னன் நிலை கலங்கியிருக்கின்ற இப்பொழுதே யாம் அவனைத் துரத்திச் சென்று அவன்
இதுகாறும் பெற்றுள்ள வெற்றிப் பெருமை அழிந்து போம்படி அவனை யாம் வென்று அகற்றுவோம்
என்று நீ கூறு மளவிலே, அதுகேட்ட அம்மன்னவன் பிறர் தடுப்பினும் தடையுண்ணாத பெரும்
விருப்பத்தையுடையவனாகித் தானே போருக்குப் புறப்படுவன். அங்ஙனம் புறப்படுங்கால்
நின்னுடைய சூழ்ச்சியாலே அம்மன்னனைப் போன்ற மாண்பு மிக்க துணை வேந்தர்களை
அரண்மனையைக் காத்தற்பொருட்டு மதிலினுள்ளேயே நிறுத்திவைத்துப் பின்னரும் மதிலுக்கு
வெளிப்புறத்தும் அம்மன்னன் படைகளுள் வைத்துப் போர்த்திறம் மிக்க படைகள் பலவற்றை
நிறுத்திவைத்த பின்னர், எஞ்சிய கொல்லும் படைகள் சிலவற்றோடு அம்மன்னனை
அழைத்துக்கொண்டு எம்மை நோக்கி வந்து நெருங்கிய பின்னர்;
என்க. |
|
(விளக்கம்) மிகுதி அச்சம் - மிகையான அச்சம். அவற்கு - அவ்வாருணி மன்னனுக்கு.
பெருவிறல் - பெரிய வெற்றி. பீடு-பெருமை. கலக்கப்பொழுது - நிலைகலங்கி
யிருக்கும்பொழுது. விலக்கநில்லா வேட்கையன் - பிறர் தடுக்கவும் தடையுண்ணாத
விருப்பத்தையுடையவன். புறமதில் -
மதிற்புறம்.
|