பக்கம் எண் :

பக்கம் எண்:482

உரை
 
3. மகத காண்டம்
 
25. அரசமைச்சு
 
          சவரர் புளிஞர் கவர்வுறு கடுந்தொழில்
          எழுச்சி கூறி யிகலடு பெரும்படை
          மாட்டல் வேண்டுமென் றோட்டியெத் திசையும்
          கூட்டத் துள்ளே கூறுபடப் போக்கிச்
    125    சிறுபடை யாகிய பொழுதிற் கதுமென
          உறுபடை யழித்துமென் றுடன்றுமேல் வந்தென
          முன்னும் பின்னும் பக்கமு நெருக்கியவன்
          கொண்முர ணிரிப்பிற் கோளெளி தாமென
          உண்முர ணுதயண னுரைத்தனன் வணங்கி
 
                     (இதுவுமது)
            121 - 129 : சவரர்.........உரைத்தனன்
 
(பொழிப்புரை) ''நீ அவ்வாருணியை நோக்கி, 'வேந்தே ! உதயண மன்னனுக்கு உதவியாக இடவகனால் செலுத்தப்பட்ட சவரரும் நம் நகரத்தைக் கொள்ளை கொள்ளுகின்ற கொடியதொரு தொழிலை மேற்கொண்டு நம் நகர்மேல் வருகின்றனர்'' என்று அவ்வமையத்தே இடவகனால் அவ்விடத்திற்குச் செலுத்தப்படுகின்ற அச்சவரர் புளிஞருடைய படையெழுச்சியைக் காட்டி 'இப்படைகளை நம்முடைய படையுள் வைத்துப் பெரும்பகுதி சென்று கொல்லுதல் வேண்டும்' என்று அறிவித்து, நும்பாலுள்ள அப்படையினும் கூறு கூறாகச் செய்து எத்திசையிலும் போக்குக! அங்ஙனம் போக்கியதனால் மிகச்சிறிய படையாகிய பொழுது யாங்கள் அங்ஙனம் வந்த படையை அழிப்பேம் என்று துணிந்து அப்படையின் முன்புறமும் பின்புறமும் இருபக்கங்களும் ஆகிய நாற்பக்கங்களினும் வந்து அப்படையை நெருக்கி அவர்மேல் போர் தொடுத்து அவருடைய வலிமையைக் கெடுத்து ஓட்டுவேமாயின், நம் தலைநகரத்தை மீண்டும் நாம் கைக்கொள்ளுதல் நமக்கு மிக எளிதாம்'' என்று உட்பகையுடைய உதயணன் அவ்வருடகாரனுக்குத் தன் துணிவினை அறிவித்தனன்; என்க.
 
(விளக்கம்) சவரர் புளிஞர் - இடவகனால் உதயணனுக்கு உதவியாக விடுக்கப்பட்ட சவரரும் புளிஞரும் என்க. மாட்டல் - மாள்வித்தல்; அகப்படுத்தலுமாம். கூறுபடப் போக்கியதனால் எஞ்சிச் சிறுபடையாகிய பொழுதில் என்க. யாங்கள் அழித்தும் என்று ஆரவாரித்து மேல் வந்து என்க. வந்தன - வந்து. அவன் : ஆருணி. கோள்- கைக்கொள்ளுதல். உள்முரண் - உட்பகை; உள்வலியுமாம்.