பக்கம் எண் :

பக்கம் எண்:483

உரை
 
3. மகத காண்டம்
 
25. அரசமைச்சு
 
          உண்முர ணுதயண னுரைத்தனன் வணங்கி
    130    நன்றெனப் போகித் தன்றமர்த் தழீஇ
          முன்னா னுரைத்த வின்னா வெவ்வுரைக்
          கொன்னா ரோட்டிய வுதயண னுள்ளத்
          துவர்த்த லன்றியுஞ் சிவக்கு மென்னைப்
          பழியாக் கொண்டன னழியின னடையெனைப்
    135    பகலு மிரவு மகலி ராகிக்
          காப்புநன் கிகழன்மின் கரும முடிதுணை
          ஒப்புற வொருவனை யுறப்பெறி னவனொடு
          தீக்குழி வலித்தியாந் தீரினுந் தீர்தும்
          யாதுசெய் வாங்கொலென் றஞ்சினம் பெரிதெனக்
    140    காவ லாளர்க்குக் கவன்றன னுரைப்பப்
 
                  (வருடகாரன் செயல்)
             129 - 140 : வணங்கி.........உரைப்ப
 
(பொழிப்புரை) அது கேட்ட வருடகாரன் அவ்வுதயணனை வணங்கி ''நன்று நன்று; பெருமான் சூழ்ச்சி பெரிதும் நன்று'' என உதயணனைப் பாராட்டிச் சென்று, தன்னுடைய மறவர்களையடைந்து காவலராகிய படை வீரரைப் பார்த்து, ''மறவர்களே! யாம் இப்பொழுது உதயணனைப் பாதுகாத்தற் பொருட்டு இங்கு வந்துள்ளேம். அவ்வுதயண மன்னன் தானும் முன்னொரு பொழுது ஒரு செவ்வியில் யான் வாய் காவாது கூறிவிட்ட ஒரு சுடுசொல்லைத் தன் மனத்தே வைத்துக் கொண்டு தன் உள்ளத்தே எப்பொழுதும் வெறுப்ப தோடமையால், என்னைச் சிற்சில பொழுது சினக்கவும் சினக்கின்றான். என்னை ஒரு பழியுடையேனாய்த் தன் நெஞ்சத்தே கொண்டனன். என் திறத்தில் அவன் மாறுபட்டு நடக்கின்றான். அவன் அங்ஙனமாயினும் யாமோ ஒருவனைப் பாதுகாத்தற்கு உடன்பட்டு அத் தொழிலை மேற்கொண்டுவிட்டால் அக்காரியம் முடியுமளவும் அவனோடு காவல் செய்திருந்து அத்தொழில் இயலாதாய்விடின் யாம் அவன்பொருட்டுத் தீக்குழியின்கண் விழுந்து உயிர்விடினும் விடுவேம் அல்லமோ? அவன் நந்திறத்து இங்ஙனம் இருத்தல் கண்டு யாம் பெரிதும் அஞ்சுகின்றேம்! என் செய்வோம்! என்று திகைக்கவும் திகைக்கின்றேம். அவன் அங்ஙனமாயின் நங்கடமையை நாம் நன்கு செய்தல்வேண்டும். ஆதலின் பகலும் இரவும் அம்மன்னனை அகலாதே கொண்மின். அவனை நன்கு பாதுகாத்தலின்கண் சோர்வு கொள்ளாதிருமின்'' என்று அவ்வருடகாரன் மனம் பெரிதும் வருந்தி உரையா நிற்ப; என்க.
 
(விளக்கம்) இது உதயணன் (60) ''நின்னோடென்னிடை நீப்பிவண் உண்டெனத் துன்னிய நமர்கட்குத் தோன்ற,'' கூறுக என்றவாறு, வருடகாரன் தன் காவலர்க்கு இவ்வாறு கூறுகின்றனன் என்று உணர்க. முன் நான் உரைத்த இன்னா வெவ்வுரைக்கு ஒன்னார் ஓட்டிய உதயணன் என்னை உவர்த்தலன்றியும் சிவக்கும். பழியாக் கொண்டனன்; நடை அழியினன்; என்னுந் துணையும் வருடகாரன் தன் பகைமைக்குக் காரணம் படைத்துக் கூறுகின்றனன். இன்னா வெவ்வுரை என்றது யான் வாய்காவாது கூறிய துன்பமுடைய சுடு சொல்லின் பொருட்டு என்பதுபட நின்றது. ஒன்னார் - பகைவர் - உவர்த்தல் - வெறுத்தல். சிவக்கும் - சினப்பான், பழியாக்கொண்டனன் - பழியுடையானாகக் கருதினன். ஒப்புற - பாதுகாக்க. காக்கவியலாவிடின் தீக்குழியிற் குதித்து இறப்பேம் என்றவாறு. கவன்றனன் - பெரிதும் துன்புற்றோன் போல.