பக்கம் எண் :

பக்கம் எண்:488

உரை
 
3. மகத காண்டம்
 
25. அரசமைச்சு
 
          கெடலூ ழாதலிற் கேட்ட பொழுதே
          அடலருஞ் சீற்றத் தாருணி தெளிந்து
    170    முகனறிந் துரைத்து முன்னியது முடிக்கும்
          சகுனி கௌசிகன் வருகெனத் தரீஇ
          ஒட்டா மன்ன னுதயண குமரனை
          நட்டா னாகி நாட்ட வந்த
          தண்டத் தலைவன் றளர்வி லூக்கத்து
    175    வண்டளிர்ப் படலை வருட காரன்
          நம்பாற் பட்டன னவன்வலித் ததையெலாம்
          திண்பாற் றாகத் தெளிந்தன னிவனெனச்
 
               (ஆருணியின் செயல்)
            168 - 177: கெடலூ.........இவனென
 
(பொழிப்புரை) வெல்லுதற்கரிய வெகுளியையுடைய அவ்வாருணி மன்னனுக்குப் போகூழ் அப்பொழுது தலைப்பட்டிருத்தலாலே, அச்சேனாபதி மகன்கூறிய சொற்களைக் கேட்டபொழுதே சிறிதும் ஆராய்ச்சியின்றி ஏற்றுக்கொண்டவனாய்ப் பகைவரது முகக்குறிப்பைப் பார்த்தே அவருக்கேற்றபடி பேசித் தான் கருதிச் சென்ற காரியங்களை முடித்துக்கொள்ளும் திறனுடைய சகுனி கௌசிகன் என்பவன் இங்குவருவானாக என்று வருவித்து அவனுக்குச் சேனாபதி மகனைக் காட்டி இவன், நம்பகை மன்னனாகிய உதயணகுமரனுக்கு நண்புடையனாய் அவனை இக்கோசம்பியின் கண் நிலைநிறுத்தற்பொருட்டு அவன் படைத்தலைவனாக வந்தவனும், தளர்வில்லாத ஊக்கத்தையுடையவனும் வளவிய தளிராலியன்ற படலை மாலையணிந்தவனும் ஆகிய வருடகாரன் என்பவன் இப்பொழுது அவ்வுதயணனுக்குப் பகைவனாய் நம்முடைய நண்பனாய் மாறிவிட்டனன் என்னும் செய்தியோடு அவ்வருடகாரன் கருதியதையெல்லாம் உறுதியாகத் தெளிந்துகொண்டு வந்து நமக்குக் கூறினன் என்று கூறி; என்க.
 
(விளக்கம்) ''ஆகூழாற் றோன்று மசைவின்மை கைப்பொருள்
      போகூழாற் றோன்று மடி''  (குறள். 371)


     ''பேதைப்படுக்கு மிழவூ ழறிவகற்று
      மாகலூ ழுற்றக் கடை''   (குறள். 372)


என்னும் பொன்மொழிகட்கிணங்க ஆராய்ந்து துணியவேண்டிய அம்மன்னவன் கெடலூழ் தலைப்பட்டிருத்தலின் கேட்டபொழுதே ஆராயாது தெளிந்தனன் என்றார். முகன் - முகக்குறிப்பு. முன்னியது - கருதிய காரியம். சகுனி கௌசிகன் : ஓரொற்றன். ஒட்டா மன்னன் - பகை மன்னன். நட்டானாகி - நண்பு செய்தவனாய். நாட்ட - நிலை நிறுத்த. இவன் - இச்சேனாபதி மகன்.