பக்கம் எண் :

பக்கம் எண்:49

உரை
 
3. மகத காண்டம்
 
4. புறத்தொடுங்கியது
 
           வித்தக வினைஞர் பத்தியிற் குயிற்றிய
     15     சித்திரச் சாலையு மொத்தியைந் தோங்கிய
           ஒட்டுவினை மாடமுங் கொட்டுவினைக் கொட்டிலும்
           தண்ணீர்ப் பந்தருந் தகையமை சாலையும் 
           அறத்தியல் கொட்டிலு மம்பலக் கூடமும்
           மறப்போர்க் கோழி மரபிற் பொருத்தும்
     20    விறற்போ ராடவர் விரும்பிய கண்ணும்
           மறக்களி யானை வடிக்கும் வட்டமும்
           கடிசெல் புரவி முடுகும் வீதியும்
           அடுத்தொலி யறாஅ வரங்கமுங் கழகமும்
           அறச்சோற் றட்டிலு மம்பலச் சாலையும்
 
                (சித்திரச்சாலை முதலியன)
           14 - 24 ; வித்தக....................அம்பலச்சாலையும்
 
(பொழிப்புரை) சிற்பத் தொழிலோர் நிரல்பட இயற்றிய சித்திரச்
  சாலையும் ஒன்றனோடு ஒன்று ஒத்துப் பொருந்தி உயர்ந்துள்ள
  ஒட்டுத் தொழிலையுடைய மாடங்களும் செம்பு முதலியன
  கொட்டித் தொழில் செய்யும்கொட்டிலும், தண்ணீர்ப்பந்தர்களும்,
  அழகு செய்து கொள்ளுதற்கியன்ற சாலைகளும், அறஞ் செவியறி
  வுறுத்தும் கொட்டிலும், பொதுமன்றங்களும் மறத்தோடு போர்
  புரியும் கோழிச் சேவலை முறைமையாலே போரிடச் செய்கின்ற
  வெற்றியையுடைய போர் மறவர் விரும்புகின்ற விளையாட்டுப்
  போர்க்களங்களும், மறமும் களிப்புமுடைய யானைகளைப்
  பயிற்றும்  வட்டவடிவமான களங்களும் விரைந்து செல்லுங்
  குதிரைகளை முடுக்கிச் செலுத்தும் வீதிகளும், அடுத்தடுத்து
  இசையறாத கூத்தாட்டரங்கமும் சூதாடுகளங்களும் அறச்சோறு
  சமைக்கும் அட்டில்களும் அம்பலச்சாலைகளும் என்க,
 
(விளக்கம்) வித்தக வினைஞர் என்றது சிற்பிகளையும் ஓவியரையும்,
  ஒட்டு வினை மாடம் செங்கல்லைச் சுண்ணத்தால் ஒட்டிய மாடம் என்க.
  கொட்டுவினை - செம்பு முதலியன கொட்டிச் செய்யும் கன்னார் தொழில்.
  தகை-அழகு, ஒப்பனை செய்து கோடற்குரிய சாலை என்க. அறத்தியல்
  கொட்டில் என்றது அறங் கூறுஞ் சமயக் கணக்கர் இடம் என்க. அம்பலக்
  கூடம். (18) அம்பலச்சாலை (24) என்னும் இவற்றுள் முன்னது நகர மக்கள்
  கூடும் மன்றம் என்றும் பின்னது வம்பலர் தங்குஞ் சத்திரம் என்றும் கொள்க.
  விரும்பிய கண்ணும் என்புழி கண் - இடம் என்க. வட்டம் - வட்டமான
  களம். கழகம் - குதாடுகளம். படைக்களம் பயிலுமிடமுமாம், அறச்சோற்றட்டில்
  என்பதனோடு தொடர்தலின் ஈண்டுக் கூறும் அம்பலச்சாலை சத்திரமேயாதல்
  தெற்றென விளங்கும்,