பக்கம் எண் :

பக்கம் எண்:491

உரை
 
3. மகத காண்டம்
 
26. பாஞ்சாலராயன் போதரவு
 
         
     5    தார காரியைத் தரீஇ நீசென்
          றூர்கடற் றானை யுதயணற் குறுகி
          எண்ணிய கரும மெல்லாந் திண்ணிதிற்
          றிரித லின்றி முடிந்தன வதனால்
          பரிதல் வேண்டா பகைவன் றூதுவன்
     10    சகுனி கௌசிகன் றன்னை யன்றியும்
          விசயவில் லாளரை விடுத்தனன் விரைந்தென்
          றோடினை சொல்லென நீடுத லின்றி
 
                    (இதுவுமது)
            5 - 12 : நீசென்று .......... சொல்லென
 
(பொழிப்புரை) ''ஐய ! நீ சென்று இயங்குகின்ற பெரிய கடல் போன்ற படையையுடைய உதயணமன்னனையணுகி நாம் கருதிய காரியம் எல்லாம் உறுதியாகச் சிறிதும் பிறழ்தலின்றி நிறைவேறின. ஆதலாலே வருந்துதல் வேண்டா. இப்பொழுது நம் பகைவனாகிய ஆருணி தன் தூதுவனாகிய சகுனி கௌசிகன் என்பவனையும் மேலும் வெற்றியுடைய வின்மறவர் மூவரையும் நம்பால் விடுத்துள்ளான்'' என்று விரைந்து ஓடிச்சென்று கூறுவாயாக என்று அவ்வருடகாரன் கூறாநிற்ப; என்க.
 
(விளக்கம்) ஊர்கடல் : வினைத் தொகை. திரிதலின்றி - பிறழ்தலின்றி.  பரிதல் வேண்டா - வருந்துதல் வேண்டா. பகைவன் -  ஆருணி தூதுவனாகிய சகுனி கௌசிகன் என்க. விசய வில்லாளர் -  வெற்றியையுடைய வின்மறவர்.