பக்கம் எண் :

பக்கம் எண்:496

உரை
 
3. மகத காண்டம்
 
26. பாஞ்சாலராயன் போதரவு
 
           அந்தி கூர்ந்த வந்தண மாலைச்
           செந்தீ யீமஞ் செறியக் கூட்டி
           அகணி யாகிய வாய்பொருட் கேள்விச்
     30    சகுனி கௌசிகன் றன்னொடு மூவரை
           இடுமி னென்றவன் கடுகி யுரைப்ப
           நொடிபல வுரைத்து நோக்குதற் காகா
           அடலெரி யகவயி னார்த்தன ரிடுதலும்
 
                  (இடவகன் செயல்)
             27 - 33 : அந்தி ......... இடுதலும்
 
(பொழிப்புரை) செக்கர் வானம் மிக்க அழகிய குளிர்ந்த மாலைப் பொழுதிலே சுடுகாட்டின்கண் சிவந்த நெருப்பை நிரம்ப மூள்வித்து நம் கைப்பட்ட ஆராய்ந்த நூற்பொருட் கேள்வியையுடைய
இந்தச் சகுனி கௌசிகன் என்பவனோடு இவருள் வைத்து மூவரை அத்தீயினுள் இட்டுக் கொல்லுங்கோள்! என்று அவ்விடவகன் என்னும் அமைச்சன் விரைந்து கட்டளையிடா நிற்ப, அது கேட்ட அம்மறவர்கள் அத்தூதுவரை நொடிச்சொல் பற்பல கூறி இகழ்ந்து பற்றிக் கொடு போய்ச் சுடுகாட்டின் கண் வளர்த்த காண்டற்கு மியலாத கொலை நெருப்பினூடே ஆரவாரித்துக் கொண்டு அவருள் மூவரைத் தள்ளிக் கொல்லாநிற்ப; என்க.
 
(விளக்கம்) அந்தி - செக்கர் வானம். ஈமம் - சுடுகாடு. அகணி - அகப்பட்டவன்; ககணி என்றும் பாடம். இதற்கு வானத்திலுள்ள பொருள்களின் இயக்கத்தையறிபவன் என்று பொருள் கொள்க. நால்வருள் வைத்து மூவரையிடுக என்றது ஒருவன் போய் இச் செய்தியை ஆருணிக்குக் கூறுக என்னுங் கருத்தால் என்க. கடுகி - விரைந்து. நொடி - அசதி மொழி; பரிகாச மொழி. நோக்குதற்கும் ஆகா எனல் வேண்டிய உயர்வு சிறப்பும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. அடலெரி - கொல்லுதலையுடைய நெருப்பு.