பக்கம் எண் :

பக்கம் எண்:499

உரை
 
3. மகத காண்டம்
 
26. பாஞ்சாலராயன் போதரவு
 
           உய்ந்தோ ரோடி யூரகங் குறுகிப்
     45    பைந்தார் வேந்தனைக் கண்டுகை கூப்பி
           அகலா தாகிய வரும்பெறற் சூழ்ச்சிச்
           சகுனி கௌசிகன் சார்ச்சியை முன்னே
           உதையண னுணர்ந்து புதைவனர்த் தம்மெனத்
           தமர்களை யேவலி னவர்வந் தவரைக்
     50    கொண்டனர் செல்ல வண்டலர் தாரோன்
           விடைப்பே ரமைச்சனுழை விடுத்தலின் மற்றவன்
 
        (பிழைத்தோர் ஆருணியரசன்பாற் சென்று கூறுதல்)
             44 - 51 : உய்ந்தோர் ......... விடுத்தலின்
 
(பொழிப்புரை) இடவகனால் தீயிலிட்டுக் கொல்லப் படாதபடி தப்பியவர் கோசம்பி நகரத்தை யணுகிப் பசிய மலர் மாலையணிந்த ஆருணி மன்னனைக் கண்டு கை கூப்பி வணங்கித் தன்னை எக்காலும் அகலாத பெறலரிய சூழ்ச்சியினையுடைய சகுனி கௌசிகன் முதலியோருடைய வரவினை உதயணமன்னன் தம் மாற்றவரால் முற்பட உணர்ந்து குகையினுள் ஒளிந்துறையும் அத்தூதுவரைப் பிடித்துக் கொண்டு வாருங்கள் என்று தம் மறவரை ஏவுதலாலே அம்மறவர் வந்து இத்தூதுவரைப் பற்றிக் கொண்டு செல்லாநிற்ப வண்டுகள் மொய்க்கின்ற மலர்ந்த மாலையினையுடைய உதயண மன்னன் அத்தூதுவரை இடவகன்பால் செலுத்துதலாலே ; என்க.
 
(விளக்கம்) ஊர் : கோசம்பி நகரம். வேந்தன் : ஆருணி. சூழ்ச்சி எஞ்ஞான்றும் அகலாது தன் பாலதாகிய சகுனி கௌசிகன் என்க. சார்ச்சி - சார்வு. புதைவனர் - மறைந்திருப்போர். தாரோன் : உதயணன். விடைப் பேரமைச்சன் : இடவகன்.