பக்கம் எண் :

பக்கம் எண்:5

உரை
 
3. மகத காண்டம்
 
1. யாத்திரை போகியது
 
         
     25    மகத மன்னனொடு மகட்கிளை யாகித்
           தொகைகொண் டீண்டியவன் றொல்படை தழீஇ
           ஆதித் துணிவுடை நீதியிற் கரந்த
           தம்பியர் கூடவெம்பிய வெகுட்சியின்
           ஒடுங்கா மாந்த ருள்ள மஞ்சப்
     30    பாடுபெயர்ந் திடிக்கு மேடகம் போல
           அகன்றுபெயர்ந் தழிக்கு மரும்பெறற் சூழ்ச்சி
           நவின்ற தோழனொடு பயம்பட வலித்து
           மதியுடை யமைச்சர் மனந்தெளி வுறீஇப்
           புதிதிற் கொண்ட பூக்கவின் வேழம்
     35    பணிசெயப் பிணிக்கும் பாகர் போல
           நீதி யாள ராதி யாகிய
           திறத்திற் காட்டவு மறத்தகை யழுங்கி
 
        (அமைச்சர் தம்முட் சூழ்தலும் உதயணனுக்கு உறுதி கூறலும்)
              25 - 37 ; மகத............அழுங்கி
 
(பொழிப்புரை) அவ்வமைச்சர்கள்தம்முள்ஒருங்கே குழுமி
  ஆராயுங்கால்  ?யாம்  ஆருணியரசனை  வெல்லுதற்கு  மகதநாட்டு
  மன்னவனோடு  அவன்  குடியிற்  பிறந்த  மகளுக்குக் கணவனாகு
  மாற்றாலே  நம்  மன்னவன்  அவனது  கேண்மையைக்  கொண்டு
  அவனது  பழைய  படையையும்  சேர்த்துக்  கொண்டு  முன்னரே
  காலம்  வருமளவும்  கரந்துறைதல்  வேண்டும்  என்னும்  அரச
  நீதியினாலே  துணிந்து  மறைந்துறையா  நின்ற  நம்மிளவரசராகிய
  பிங்கலகடகரும்  நம்மொடு  வந்து  கூடா  நிற்ப  நம்பால்  மனம்
  வேதற்குக்  காரணமான  வெகுளியையுடைய  நம் பகைவரெல்லாம்
  ஒரு  சேர  உள்ளம்  நடுங்கும்படி,  பின்  சென்று  வலி சேர்த்துக்
  கொண்டு முன்னேறித்  தாக்காநின்ற  போர்க்கிடாய்  போன்று நாமும்
  இடம்  பெயர்ந்து அஞ்சுவார் போன்று சென்று மீண்டும் முன்னேறிப்
  போராற்றி  அவரை  அழித்தல்  வேண்டும் என்னும்  பெறுதற்கரிய
  சூழ்ச்சியினைத்  தம்பாற்  கூறிய  தோழனாகிய உருமண்ணுவாவோடு
  மீண்டும் அச்சூழ்ச்சி பயன்படும் வழியையெல்லாம் நன்கு ஆராய்ந்து
  துணிந்து அவ்வமைச்சர்கள் உதயணன்பாற்சென்று அவன் மனத்தைத்
  தெளிவுறச்  செய்தற்குத்  தொடங்கிப்  புதுவதாகக்  காட்டினின்றும்
  கைப்பற்றிக்  கொணர்ந்த,  தெறுழம்பூப்  போன்று  அழகுற்ற
  புகர்களையுடைய  யானையைத்  திருத்தித்  தாம் ஏவிய தொழிலைச்
  செய்யப் பயிற்றுவிக்கும் பாகர் போன்று பண்டைக் காலத்து அரச நீதி
  கூறிய.  சான்றோர்  கூற்றுக்களை எடுத்தோதித் தெளிவியா நிற்பவும்,
  அறவோனாகிய அவ்வுதயண மன்னன் தெளியானாய் வருந்தி என்க.
 
(விளக்கம்) மகதமன்னன் - தருசகமன்னன். மகட்கிளை -மகட்
  கோடல் வாயிலாய் உண்டாகும் உறவு, மகதமன்னனொடு மகட்கிளையாகி
  என்றது பேணிக்கொளல் என்னும் உபாயம். ?பிரித்தலும் பேணிக்கொளலும்
  பிரிந்தார்ப், பொருத்தலும் வல்ல தமைச்சு" எனவரும் திருக்குறளும்
  காண்க அமைச்சர் தொகை கொண்டீண்டி என்க. மன்னனோடு தொகை
  கொண்டு ஈன்டி என்க ; தொல்படை - வழிவழிவந்த பழம்படை. ஆதி -
  முன்னர், தம்பியர்-உதயணன் தம்பியராகிய  பிங்கலகடகர். ஒடுங்காமாந்தர்
  - பகைவர், பாடு -இடம், மேடகம் -ஆட்டுக்கிடாய், பாடுபெயர்ந்திடிக்கும்
  மேடகம் என்னும் இவ்வுவமையோடு ''ஊக்க முடையான் ஒடுக்கம்
  பொருதகர், தாக்கற்குப் பேருந் தகைத்து'' எனவரும் இனிய திருக்குறளையும்
  (486) நினைக. தோழன் உருமண்ணுவா. பூக்கவின் வேழம் என்றது தெறுழம்
  பூப்போன்ற புகர்களாலே அழகெய்திய வேழம் என்றவாறு. என்லை??
  ''களிற்றுமுகவரியிற் றெறுழ்வீபூப்ப'' எனப் பிறரும் ஓதுதல் (புறநா-119,)
  காண்க.. ஆதியாகிய நீதியாளர் திறத்திற் காட்டி என்க. அறத்தகை :
  அன்மொழி ; உதயணன்.