பக்கம் எண் :

பக்கம் எண்:50

உரை
 
3. மகத காண்டம்
 
4. புறத்தொடுங்கியது
 
         
     25    தேவ குலனுந் தேசிகப் பாடியும்
           மாவுந்தேரு மயங்கிய மறுகும்
           காவுந் தெற்றியுங் கடவுட் பள்ளியும்
           தடவளர் செந்தீ முதல்வர் சாலையும்
           வேண்டிடந் தோறுங் காண்டக நெருங்கி
     30    ஆதி யாகி யமைந்தவனப் பெய்தி
           மயங்கிய மாந்தர்த் தாகி யார்க்கும்
           இயங்குதற் கின்னாப் புறம்பணைச் சேரியும்
           அந்தண் பாடியு மணுகி யல்லது
           வெந்திறல் வேகமொடு விலக்குதற் கரிய
     35    ஐங்கணைக் கிழவ னமர்ந்துநிலை பெற்ற
           எழுதுவினைத் திருநக ரெழிலுற வெய்தி
 
                 (இதுவுமது)
             25-36 ; தேவ............எய்தி
 
(பொழிப்புரை) தேவர் கோட்டமும் பிறநாட்டு வணிகர்
  உறையும் தேசிகச்சேரியும்,யானை, குதிரை, தேர் என்னும்
  இம்முப்படையும் கலந்த வீதிகளும் மலர்ப்பொழில்களும்
  மேடைகளும் துறவோரிருக்கையும் வேள்விக்குழியில் சிவந்த
  தீயினை வளர்க்கும் பார்ப்பனர் வேள்விச்சாலையும் அவை
  அவை இருத்தற்குரிய இடந்தோறும் இடந்தோறும் அமைந்து
  காட்சிக்கினியவாக நெருங்கி இருத்தலானே நகரத்திற்கோதிய
  இலக்கணங்களுள் தலையான இலக்கணமமைந்து யாண்டுஞ்
  செறிந்த மக்களையுடையதாய் யாவரானும் ஊடே செல்லுதற்
  கின்னாமை செய்யும் நகரத்தின்புறத்தே அமைந்தஇடத்தினும்
  சேரிகளும் பார்ப்பனச்   சேரியும் அணுகப்பட்டதாய், வெவ்விய
  ஆற்றலும் வேகமும் உடையவாய், யாரானும் விலக்குதற்கு
  அரியவாகிய ஐந்து   மலர்க்கணைகட்கும் உரியவனாகிய காமவேள்
  விரும்பி எழுந்தருளிய ஓவியமெழுதப்பட்ட அழகிய காமவேள்
  கோட்டத்தையும் தன் அழகுமிகும்படி தன்பாலுடைய தாய் என்க
 
(விளக்கம்) தேவகுலம் - திருக்கோயில். தேசிகப்பாடி - பிற
  நாட்டு வணிகர் வந்துறையும் தெரு கடவுட் பள்ளி-துறவோரிருக்கை.
  தட-வேள்விக் குழி, முதல்வர்-அந்தணர். புறம்பணைச்சேரி- நகரின்
  மருங்குள்ள சேரி. அந்தண்பாடி - அந்தணர் தெரு. ஐங்கணைக்
  கிழவன்-காமவேள். திருநகர் காமன்கோயில்.