பக்கம் எண் :

பக்கம் எண்:502

உரை
 
3. மகத காண்டம்
 
26. பாஞ்சாலராயன் போதரவு
 
           என்றனன் விடுத்தலி னன்றென விரும்பிக்
     65    கோயிலு நகரமுங் காவலு ணிறீஇக்
           காழா ரெஃகமுதல் கைவயிற் றிரீஇயர்
           ஏழா யிரவ ரெறிபடை யாளரும்
           ஆறா யிரவ ரடுகடு மறவரும்
           வீறார் தோன்றலொடு விளங்குமணிப் பொலிந்தன
     70    ஆயிரந் தேரு மடர்பொன் னோடையொடு
           சூழியிற் பொலிந்தன பாழியிற் பயின்றன
           ஐந்நூ றியானையு மகினா றகற்சிய
           ஆர்க்குந் தாரொடு போர்ப்படை பொலிந்தன
           மிலைச்ச ரேறித் தலைப்படைத் தருக்குவ
     75    ஒருபதி னாயிரம் விரைபரி மாவும்
           முன்ன வாகத் தன்னொடு கொண்டு
 
                     (இதுவுமது)
              64 - 76 : நன்றென.........கொண்டு
 
(பொழிப்புரை) அம்மொழியை அம்மறவர் வாயிலாய்க் கேட்ட ஆருணிமன்னன் ''நன்று நன்று'' என்று மகிழ்ந்து வருடகாரன் செயலை மிகவும் விரும்பி அரண்மனையினையும் நகரத்தையும் சிறந்த காவலுள் வைத்துக் காம்பிற்றைத்த வேற்படை முதலிய படைக்கலங்களைத் தங்கைகளிலே ஏந்திச் சுழற்றுபவராகிய படை மறவர் ஏழாயிரவரும், பகைவரைக் கொல்லுதற்கண் கடுமையுடைய மறவர் ஆறாயிரவரும், வீறுடைய தலைவர்களோடு விளங்குகின்ற மணிகளாலே பொலிவுற்றனவாகிய ஆயிரந்தேரும் பொற்றகட்டாலாகிய முகபடாத்தையுடையனவும், நெற்றிப்பட்டத்தாற் பொலிவுற்றனவும், போர்க் களத்தின்கண் நன்கு பயின்றனவுமாகிய ஐந்நூறு யானைகளும், அகில் மணங்கமழும் அகன்றனவும் ஆரவாரிப்பனவும் ஆகிய தாரோடும் படைக்கலங்களோடும் பொலிவுற்றனவும் மிலைச்சர் ஏறுவனவும் முதற்படையின்கண் செருக்குற்றுச் செல்வனவும் ஆகிய விரைவுடைய குதிரைகள் ஒரு பதினாயிரமும், முற்படையின் கண்ணே தன்னோடு திரட்டிக் கொண்டு ; என்க.
 
(விளக்கம்) கோயில் - அரண்மனை. நகரம் - கோசம்பி நகரம். காழ் - காம்பு. எஃகம் - வேல். திரீஇயர் - திரிபவர்களாகிய. எறிபடை : வினைத்தொகை. அடர் - பொற்றகடு, போர்ப்படை - படைக்கலங்கள். மிலைச்சர் : இவர் ஒரு வகை மறவர்.