பக்கம் எண் :

பக்கம் எண்:503

உரை
 
3. மகத காண்டம்
 
26. பாஞ்சாலராயன் போதரவு
 
           நாவாய்ப் பெருஞ்சிறை நீர்வாய்க் கோலிச்
           சாந்தார் மார்பிற் சாயனுஞ் சாயாக்
           காந்தா ரகனுங் கலக்கமில் பெரும்படைச்
     80    சுருங்காக் கடுந்திறற் சூர வரனெனும்
           பெரும்பேர் மறவனும் பிரம சேனெனும்
           அரும்போ ரண்ணலு மவர்முத லாகப்
           பெரும்படைத் தலைவரும் பிறருஞ் சூழப்
           பூரண குண்டல னென்னு மமைச்சனொ
     85    டாருணி யரசன் போதர வறிந்தபின்
 
                   (இதுவுமது)
              77 - 85 : நாவாய்.........பின
 
(பொழிப்புரை) ஓடங்களாகிய பெரிய பாதுகாவலை நீரினிடத்தே சூழ அமைத்துக்கொண்டு சந்தனம்பூசிய மார்பினையுடைய சாயனும் போரிற் புறங்கொடாத காந்தாரகனும், கலக்கமில்லாத பெரிய படையையும் குறையாத கடிய திறலையுமுடைய சூரவரனும், பெரிய புகழையுடைய மறவனும், பிரமசேனன் என்னும் அரிய போரினையுடைய தலைவனும், அவரையுள்ளிட்ட பெரிய படைத் தலைவர்களும் ஏனையோரும் தன்னைச் சூழ்ந்து வாராநிற்பப் பூரணகுண்டலன் என்னும் சிறந்த அமைச்சனோடு அவ்வாருணி மன்னன் வாராநிற்ப, அவன் வருகையை அறிந்த பின்னர் ; என்க.
 
(விளக்கம்) நாவாய் - ஓடம். நீர்வாய் - நீரிடத்து. சாயன் - ஒரு மறவன் பெயர். சாயா - புறங்கொடாத. பெரும்பேர் மறவன் என்புழி மறவன் என்பது ஈண்டுப் பெயர். பிரமசேன் - பிரமசேனன் என்பதன் விகாரம்.