பக்கம் எண் :

பக்கம் எண்:505

உரை
 
3. மகத காண்டம்
 
26. பாஞ்சாலராயன் போதரவு
 
           எடுத்தனன் றழீஇ யின்னுரை யமிர்தம்
           கொடித்தேர்த் தானைக் கோமான் கூறி
     90    இருக்கென விருந்த பின்றை விருப்போ
           டாய்தார் மார்ப னீர்வயி னிரைத்த
           நாவாய் மிசையே மேவா ருட்கப்
           பதினா றாயிர ரடுதிறன் மறவரும்
           அதிராச் செலவின வாயிரங் குதிரையும்
     95    முதிரா யானை முந்நூற் றறுபதும்
           காணமும் வழங்கி நாணா டோறும்
 
        (ஆருணி வருடகாரனுக்குச் சிறப்புச் செய்தல்)
              88 - 96 : எடுத்தனன்........வழங்கி
 
(பொழிப்புரை) அங்ஙனம் தன் அடிகளிலே வீழ்ந்துவணங்கிய அவ்வருடகாரனைக் கொடிகட்டிய தேர்ப்படையையுடைய அக்கோமான் தன் இரு கைகளாலும் எடுத்து மார்போடு தழுவிக்கொண்டு அமிழ்தம்போன்ற இனிய முகமன் மொழிகளைக் கூறி, ஓர் இருக்கையைக் காட்டி இதன்கண் அமர்கவென்று உபசரித்தலாலே, அவ்வருடகாரன் அவ்விருக்கையின்கண் இருந்த பின்னர் அழகிய மாலையணிந்த மார்பினையுடைய அவ்வாருணி வேந்தன் ஆர்வத்தோடே நீரின் கண் மிதக்கும் ஓடங்களின்மேல் ஏறிய பதினாறாயிரம் கொல்லுந் திறல்மிக்க மறவர்களைத் தம்பகைவர் அஞ்சும்படி அவ்வருடகாரனுக்கு வழங்கி, மேலும் நடுங்காத செலவினையுடைய ஆயிரங்குதிரைகளையும், முந்நூற்றறுபது இளயானைகளையும், பொற்காசுகளையும் வழங்கி ; என்க.
 
(விளக்கம்) அமிழ்தம்போன்ற இன்னுரை என்க. கோமான் : ஆருணி மன்னன். மார்பன் : ஆருணி. நாவாய் - ஓடம். மேவார் உட்க - பகைவர் அஞ்சும்படி. அதிராச் செலவு - நடுங்காத நடை. முதிரா யானை - இளமையுடைய யானைகள். காணம் - பொற்காசு.