பக்கம் எண் :

பக்கம் எண்:507

உரை
 
3. மகத காண்டம்
 
26. பாஞ்சாலராயன் போதரவு
 
          வல்வினைக் கடுந்தொழில் வருட காரன்
    100    செல்படைக் குபாயஞ் செறியக் கூறி
          மறுகரை மருங்கிற் செறியப் போக்கிப்
          பாஞ்சால ராயனைப் பாங்குறக் கண்ணுற்
          றாம்பாற் கரும மாண்புறக் கூற
          அருஞ்சிறைத் தானை யாருணி யரசனிற்
    105    பெருஞ்சிறப் பெய்தி யிருந்தன னினிதென்
 
                  (வருடகாரன் செயல்)
             99 -105 : வல்வினை.........இனிதென்
 
(பொழிப்புரை) அந்த வலிய ஆள்வினையை மேற்கொண்டு கடிதில் முயலும் அவ்வருடகாரன் தானும் அங்குச் செல்கின்ற தன்னுடைய படைகளுக்கு மனத்திற்படும்படி எடுத்துக்கூறி அவரையெல்லாம் அம்மரக்கலங்களோடு மறுகரைக்குப் போக்கிப் பின்னர் ஆருணியரசனை நோக்கி, மேல் நிகழவேண்டிய காரியங்களை மாண்புறக் கூறுதலாலே, அரிய சிறைபோன்ற கடத்தற் கரியபடைகளையுடைய அந்த ஆருணியரசனால் மிக்க சிறப்பளிக்கப் பெற்று அவ்வருடகாரன் இனிதே இருந்தனன் ; என்க.
 
(விளக்கம்) வல்வினை - வலிய ஆள்வினை. கடுந்தொழில் - கடிய போர்த்தொழிலுமாம். ஆம்பாற் கருமம் - இனி ஆதற்கு வேண்டிய காரியங்கள். அரிய சிறைபோன்ற தானை என்க.

               26. பாஞ்சாலராயன் போதரவு முற்றிற்று.