உரை |
|
3. மகத காண்டம் |
|
27. பறை விட்டது |
|
பெருஞ்சிறப்
பெய்தியவ னிருந்த செவ்வியுள்
வண்டார் தெரியல் வருட
காரனிற்
பண்டே பயிர்குறிக் கொண்டுநன்
கமைந்த
கால்வ லிளையர் பூசல்
வாயா 5 வேல்வல் வேந்தன்
விரும்புபு கேட்ப
வடுவில் பெரும்புகழ் வத்தவன்
மந்திரி
இடவகன் பணியி னேழா
யிரவர்
சவரர் புளிஞருங் குவடுறை குறவரும்
குறுநில மன்னரு நிறைவன
ரீண்டி 10 வஞ்ச காந்தையொடு
கந்த
வதியெனும்
குளிர்புனற் பேரியாறு கூடிய
வெல்லையுள்
நளிபுன னாட்டக நடுங்கக் கவர்ந்தாண்
டொளிதரு மிருக்கையி னொடுங்கினர்
தாமெனப்
|
|
(கால்வ
லிளைஞர் ஆருணிக்குக்
கூறுதல்) 1
- 13 : பெருஞ்சிறப்பு ......... என
|
|
(பொழிப்புரை) இவ்வாறு வருடகாரன் ஆருணி மன்னனால்
பெருஞ் சிறப்புப்பெற்று இருந்தபொழுது, வண்டுகள் ஆரவாரிக்கின்ற மலர்மாலையை யணிந்த
வருடகாரனாலே முன்னரே சங்கேத ஒலியினாலே அழைத்தலைக் குறிப்பாகக் கொண்டிருந்த கால்
வலிமைபெற்ற இளைஞர் போர்வாய்க்கப்பெறாத வேற்படைப் போரில் வலிமைமிக்க அந்த
ஆருணி மன்னன் விரும்பிக் கேட்கும் படி, ''பெருமானே ! பழியில்லாத பெரிய புகழையுடைய
உதயணனுடைய அமைச்சனாகிய இடவகனுடைய பணியினாலே சவரரும் புளிஞரும் மலைகளில் உறைகின்ற
குறவரும் குறுநில மன்னர்களும் ஆகிய ஏழாயிரவர் வந்து நிறைந்து வஞ்சகாந்தை யாறும்
கந்தவதியாறும் ஆகிய குளிர்ந்த நீரையுடைய பேரியாறுகளிரண்டும் கூடாநின்ற
எல்லையிடத்தேயுள்ள செறிந்த நீரையுடைய நாட்டிலுள்ள மாந்தர்கள் நடுங்கும்படி கொள்ளை
கொண்டு அவ்விடத்தே தாம் மறைந்திருத்தற்குரிய இடத்திலே மறைந்துறைவாராயினர்'' என்று
அறிவியா நிற்ப; என்க.
|
|
(விளக்கம்) அவன் : வருடகாரன். பயிர்குறி - அழைத்தற் பொருட்டுத் தம்முள்
கற்பித்துக்கொண்ட சங்கேத ஒலி. கால்வல் இளையர் - விரைந்து செல்லும் வன்மையுடைய
ஏவலிளையர். பூசல் வாயா - போர்வாய்க்கப் பெறாத. வேந்தன் : ஆருணி. வத்தவன் :
உதயணன். சவரர், புளிஞர் என்போர் வேடர்வகையினர். குவடு - மலையுச்சி. வஞ்சகாந்தை -
ஒரு யாறு. கந்தவதி - ஒரு யாறு. ஒளி தரும் இருக்கை -
மறைந்திருக்குமிடம்.
|