பக்கம் எண் :

பக்கம் எண்:511

உரை
 
3. மகத காண்டம்
 
27. பறை விட்டது
 
           வெறுத்த வேந்தனை வெற்பிடை முற்றி
           நாற்பெரும் படையு நம்புறஞ் சூழ
           மேற்படை நெருங்கு காலை மாற்றவன்
     30    சில்படை யாளரொடு செல்படை யின்றிக்
           கூழ்பட வறுப்பப் பாழ்படப் பாய்ந்து
           பற்றிய படைஞரு மப்பாற் படர்தர
           உற்றது செய்த லுறுதி யுடைத்தென
 
                         (இதுவுமது)
               27 - 33 : வெறுத்த ......... உடைத்தென
 
(பொழிப்புரை) ''வேந்தே ! நம் பகைவனாகிய அவ்வுதயணனைத் தவதிசயந்தம் என்னும் அம்மலையின் அகத்தேயே வைத்து நமது நால்வகைப் பெரும்படையும் நம் பக்கத்தே சூழ்ந்துவரும் படி வளைத்துக்கொண்டு பின்னர் நாம் அவனை நெருக்குங்காலத்தே அப்பகை மன்னன் தன்பாலுள்ள சில படையாளரோடும் தனக்குத் துணைப்படை வருதல் இல்லாமலும், இருக்கும் அச்செவ்வியில் அவர்களைக் கலக்குதற்கு அவர் பாழ்பட்டுப் போகும்படி அவர்மேல் யாம் பாய்ந்தால், அவன் தான் பற்றியுள்ள சில் படையாளரும் அவளைக் கைவிட்டு அப்பாலே ஓடாநிற்பர்; இவ்வாறு அப்பகை மன்னனுக்கு இடையூறு செய்தல் நமக்கு உறுதி தருவதாகும்'' என்று வருடகாரன் ஆருணிக்குச் சொல்லா நிற்ப; என்க.
 
(விளக்கம்) வெறுத்த வேந்தன் : உதயணன். முற்றி - வளைத்துக் கொண்டு. கூழ்பட - கூழாகக் கலங்கும்படி, உற்றது - இடையூறு.