பக்கம் எண் :

பக்கம் எண்:512

உரை
 
3. மகத காண்டம்
 
27. பறை விட்டது
 
           இயற்கை யாக வென்றொழின் மாட்டிவன்
     35    முயற்சி யுடைமையின் முடிக்குவன் றானெனப்
           பெயர்த்து மவற்கோர் பெருஞ்சிறப் பியற்றிச்
           சொல்லிய வெல்லா நல்குவன னாகித்
           தன்படை சிறிதே யாயினு மிவன்படை
           என்படை யென்னு மெண்ண முண்மையின்
     40    எழுது மென்றவன் மொழியா மாத்திரம்
 
                (ஆருணியின் உட்கோள்)
             34 - 40 : இயற்கை ......... மாத்திரம்
 
(பொழிப்புரை) அதுகேட்ட ஆருணிமன்னன் யான் மேற்கொண்டுள்ள இப்போர்த் தொழிலின்கண் இவ்வருடகாரன் இயற்கையாகவே பெருமுயற்சி மேற்கொண்டுள்ளமையின் இத்தொழிலை இவன் நன்கு செய்து முடிப்பன் என்று கருதி மீட்டும் அவ்வருடகாரனுக்கு அவ்விடத்தே ஒருபெருஞ் சிறப்பினையுஞ் செய்து அவன் விரும்புவனவெல்லாம் அவனுக்கு வழங்குவானாய்த் தன்பாலுள்ள படை சிறிதேயாயினும் இவ்வருடகாரனிடம் உள்ள படையும் என் படையேயாகும் என்னும் துணிவிருத்தலால், ''வருடகார ! நீ கூறியபடியே நாம் அவ்வுதயணன்பால் போருக்குப் புறப்படுவோம்'' என்று கூறுமளவிலே; என்க.
 
(விளக்கம்) என்றொழில் - யான் மேற்கொண்டுள்ள இப்போர்த்தொழில். இவன் : வருடகாரன். பெயர்த்தும் - மீட்டும். அவற்கு : வருடகாரனுக்கு. எழுதும் - எழுவோம்.