பக்கம் எண் :

பக்கம் எண்:514

உரை
 
3. மகத காண்டம்
 
27. பறை விட்டது
 
           அடற்கரும் பெரும்படை யற்றப் படாமைப்
           படுப்பதோர் வாயில் பாங்குற நாடி
     45    வெம்பரி மான்றேர்த் தம்பியர்த் தழீஇ
           மதில்வடி வாகிய மலைப்புடை மருங்கே
           அதிர்குரல் வேழமும் புரவியு மடக்கி
           அவற்றுமுன் மருங்கே யகற்றுதற் கரிய
           ஒள்வாட் பெரும்படை யுள்ளுற வடக்கி
     50    அப்படை மருங்கே யயிற்படை நிறீஇத்
 
                     (உதயணன் செயல்)
                 43 - 50 : அடல் ......... நிறீஇ
 
(பொழிப்புரை) பகைவரால் வெல்லுதற்கரிய பெரிய படையைச் சோர்வுபடாமல் அகப்படுத்தும் ஒரு வழியைப் பொருத்தமுற ஆராய்ந்து கண்டு வெவ்விய செலவினையுடைய குதிரைபூண்ட தேரினையுடைய தன் தம்பியராகிய கடகபிங்கலரையும் அழைத்துக்கொண்டு,மதில்போன்று நாற்புறமும் சூழ்ந்துள்ள தவதி சயந்தம் என்னும் அம்மலையினது பக்கத்தே அதிருகின்ற முழக்கத்தையுடைய, யானைப்படையையும், குதிரைப்படையையும் அடக்கிவைத்து, அப்படைகளின் முன்புறத்தே பகைவரால் அகற்றுதற்கரிய ஒளிவாளையுடைய பெரிய காலாட் படையை அம்மலையகத்தே அடங்கும்படி அடக்கிவைத்து அப்படையின் பக்கத்தே வேற்படை மறவரை நிறுத்திவைத்து; என்க.
 
(விளக்கம்) அற்றம் - சோர்வு. படுப்பது - அகப்படுத்துவது. வாயில் - வழி. தம்பியர் : கடக பிங்கலர். முன்மருங்கு - முன்பக்கத்து.  அயிற்படை - வேற்படை. நிறீஇ - நிறுத்தி.