பக்கம் எண் :

பக்கம் எண்:515

உரை
 
3. மகத காண்டம்
 
27. பறை விட்டது
 
           தரும தத்தனைப் பெருமுகம் பெய்தவற்
           கெருத்துப்புடை யாக விடவகற் கொளீஇயவன்
           உருத்தெழு பெரும்படைக் கோடுபுறங் காட்டிப்
           படைத்தொழு வாரியி னிடைப்படப் புகுத்தி
     55    உருள்படி போல வருட காரன்
           போக்கிட மின்றி யாப்புற வடைப்ப
 
                      (இதுவுமது)
              51 - 56 : தரும ......... அடைப்ப
 
(பொழிப்புரை) தருமதத்தன் என்னும் அமைச்சனைப் பெரிய படைமுகப்பிலே நிறுத்திவைத்து, அவ்வணியின் கழுத்துப் பக்கத்தே இடவகனை நிறுத்திவைத்து, அவர்களைப் பார்த்து, ''அன்புடையீர்! நம் பகைவனாகிய ஆருணிமன்னன் நம்மேல் சினந்து வருதற்குக் காரணமான அவனுடைய பெரும்படை இங்குவந்து நுங்களைத் தாக்கியவுடனே நீங்கள் அப்படைக்கு ஆற்றமாட்டாததுபோலப் புறங்கொடுத்து ஓடுமின், அங்ஙனம் ஓடுங்கால் அப்படை நும்மைத் துரத்திவருமன்றோ? அங்ஙனம் வருங்கால், அப்படையை யானைபிடிக்கும் தொழுவாரிபோன்ற இம்மலைகளின் நடுவிடத்திற்கு வருமளவும் நீங்கள் ஓடக்கடவீர் ! அங்ஙனம் அப்படை வந்தவுடன் அப்படையைப் பின்தொடர்ந்து வருகின்ற வருடகாரன் உருள்படிபோல அப்படை மீண்டும் ஓடிவிடாதபடி தன்படையாலே நன்கு தடுத்துவிடுவன்'' என்க.
 
(விளக்கம்) தருமதத்தன் - தருசகனால் உதயணனுக்கு உதவியாக விட்ட நான்கு படைத்தலைவர்களுள் ஒருவன். முகம் - படை முகப்பு. எருத்துப் புடை - படையின் கழுத்துப் பக்கம். அவன் - ஆருணி. உருள்படி - ஒருவகைப்படி. உட்புகுந்தோர் மீண்டும் வெளிவராதபடி தான் உருண்டு தடைசெய்யும்படி. என்க. போக்கிடம் இன்றி - ஆருணி படை மீண்டும் போதற்கு இடமின்றி. நீவிர் இங்ஙனம் செய்தால் வருடகாரன் ஆருணிக்குப் பின்னாகவந்து அவன் படை திரும்பிப் போகாதபடி தன் படையினாலே வழியை அடைத்து விடுவன் என்பது கருத்து. இவ்வுபாயம் வருடகாரன் உதயணனுக்கு அறிவித்தபடியாம்.