பக்கம் எண் :

பக்கம் எண்:516

உரை
 
3. மகத காண்டம்
 
27. பறை விட்டது
 
           இருங்கணி சார னெண்ண மாக
           வரம்பணி வாரியுள் வந்துடன் புகுந்த
           அருந்திற லாருணி யென்னும் யானையைப்
     60    படைக்கலப் பாரம் பற்பல சார்த்தி
           இடுக்கண் யாஞ்செய வியைந்த தின்றென
           வாரிப் பெரும்படை மற்றவண் வகுத்து
           நேரா மன்னனை நீதியிற் றரீஇப்
           போரிற் கோடற்குப் புரிந்துபடை புதையா
     65    வார்கழ னோன்றாள் வத்தவ னிருப்ப
 
                        (இதுவுமது)
             57 - 65 : இருங்கணி ......... இருப்ப
 
(பொழிப்புரை) பெரிய கணிகாரனுடைய எண்ணமாக இங்ஙனம் நம்முடைய மலையாகிய வரம்புகளையுடைய அழகிய வாரியுள் வந்து உடனே புகுந்த அரிய ஆற்றலையுடைய ஆருணி என்னும் அந்த யானையைப் படைக்கலமாகிய சுமைகளைப் பலப்பலவாக ஏற்றி இற்றை நாள் யாம் துன்புறுத்த நன்கு பொருந்தியது என்று கூறி வருவாயையுடைய தனது பெரிய படையை அவ்விடத்தே இவ்வாறு அணிவகுத்து நிறுத்தித் தன் பகை மன்னனை முறையாலே அவ்விடத்திற்கு வரவழைத்துப் போரின் கண் கைப்பற்றிக் கொள்ளுதற்குப் பெரிதும் விரும்பி நெடிய வீரக்கழலணிந்த வலிய முயற்சியையுடைய அவ்வுதயண மன்னன் தன் படைக்கலங்களை ஓரிடத்தே மறைத்துவைத்துப் பகைவர் வருகையை எதிர்பார்த்திராநிற்ப; என்க.
 
(விளக்கம்) இருங்கணிகாரன் - பெரிய சோதிடன். பின்நிகழப் போவதை முன்னர்க் கருதலாலே கணிகாரன் எண்ணமாக இன்று இயைந்தது என்றான். வாரி - யானை அகப்படுத்தும் இடம். ஆருணியை யானையாக உருவகப்படுத்துதலாலே அம்மலையின் நடுவிடத்தை வாரி என்றான். படைக்கலமாகிய சுமை, வாரி - வருவாய். நேரா மன்னன் : ஆருணி, நீதி - இராசதந்திரம். புரிந்து - விரும்பி. புதையா - புதைத்து; மறைத்து