பக்கம் எண் :

பக்கம் எண்:518

உரை
 
3. மகத காண்டம்
 
27. பறை விட்டது
 
           அந்தமி லாற்ற லவந்தியன் யானை
     70    வெந்திற னளகிரி தன்படி வாகும்
           மந்தர மென்னு மத்த யானை
           நீல நெடுவரை நெற்றித் தாகிய
           கோலக் கோங்கின் கொழுமலர் கடுப்புறு
           சூறைக் கடுவளி பாறப் பறந்தெனப்
     75    பட்ட மடுத்த கொட்டையொடு பாறவும்
           உருமுறழ் முரசின் கண்கிழிந் ததனொடு
           சக்கர நெடுங்கொடி யற்றன வாகி
           இருநில மருங்கிற் சிதைவன வீழவும்
           புள்ளு நிமித்தமும் பொல்லா வாக
 
                   (தீய நிமித்தங்கள்)
                69 - 79 : அந்தம்.........ஆக
 
(பொழிப்புரை) முடிவில்லாத ஆற்றலையுடைய அவந்தி மன்னனாகிய பிரச்சோதனனுடைய பட்டத்தியானையாகிய வெவ்விய திறலுடைய 'நளகிரி'யை ஒத்த உருவமுடையதாகிய 'மந்தரம்' என்னும் பெயருடைய மதச் செருக்குடைய ஆருணியின் பட்டத்தியானையினது, நீல நிறமுடைய நெடிய மலையினது உச்சியின் கண்ணதாகிய அழகிய கோங்க மரத்தினது கொழுவிய மலர் போன்று தோன்றாநின்ற பொற்பட்டமும், அதனையடுத்துள்ள பொற் கொட்டையும், அக்கோங்க மலர் சூறைக் காற்று வீசுதலாலே சிதைந்து பரந்தாற் போல அப்பட்டமும் கொட்டையும் சிதைந்து வீழா நிற்பவும், இடியை யொத்த முழக்கத்தையுடைய வெற்றி முரசம் கண் கிழிந்ததனோடல்லா மல், சக்கரம் எழுதப்பட்ட அம்மன்னனுடைய நெடிய கொடியும் அற்றுப் பெரிய நிலத்தின்கண் வீழா நிற்பவும், இங்ஙனமே அப்பொழுது அவ்விடத்தே தோன்றும் புட்குரலும் நிமித்தங்களும் தீயனவாகவே நிகழா நிற்ப; என்க.
 
(விளக்கம்) அந்தம் - முடிவு. அவந்தியன் : பிரச்சோதனன். நளகிரியை - ஒத்த மந்தரம் என்னும் ஆருணி யானை என்க. நீலநெடு வரையின் நெற்றியிலுள்ள கோங்கின் மலர் யானையின் முகத்திலுள்ள பட்டம் கொட்டை என்னும் பொன்னணிகலன்களுக் குவமை. பாற - பாற்ற. உரும் - இடி. முரசு கண் கிழிதலும், கொடி அற்று வீழ்தலும், தீய நிமித்தங்கள். ''திண் பிணி முரசம் கண் கிழிந்துருளவும்'' (புறநா. 229 : 19), புள் - பறவைக்குரல்.