பக்கம் எண் :

பக்கம் எண்:521

உரை
 
3. மகத காண்டம்
 
27. பறை விட்டது
 
           ஊக்கங் கொளுவ வாக்கங் கருதி
     90    ஆருணி யரச னடற்களிறு கடாஅய்க்
           காரணி முகிலிடைக் கதிரொளி கரந்து
           மங்கு மருக்கனின் மழுங்குபு தோன்றச்
           சங்கமு முரசுஞ் சமழ்த்தன வியம்பப்
           பொங்குநூற் படாகையொடு வெண்கொடி நுடங்க
     95    நிரந்த பெரும்படை பரந்தெழுந் தோடி
           மாற்றோ னிருந்த மலையக மடுத்துக்
 
                   (ஆருணியின் செயல்)
               89 - 96 : ஆக்கம்.........அடுத்து
 
(பொழிப்புரை) இவ்வாறு வருடகாரனால் ஊக்குவிக்கப்பட்ட அவ்வாருணியரசன் தன்னுடைய கொலைக் களிற்றின் மேலேறி அதனைச் செலுத்தி முகிலால் மூடப்பட்டுத் தனது சுடரொளி மறைந்து மழுங்கித் தோன்றும் ஞாயிற்றைப்போல ஒளி மழுங்கித் தோன்றாநிற்பவும், சங்குகளும் முரசங்களும் ஒலி வேறுபட்டு ஒலியாநிற்பவும் மிக்க நூற்பெருங்கொடியும் வெண்கொடியும் அசையும்படி பரவிய பெரிய படை பின்னும் பரவி எழுந்து சென்று பகை மன்னனாகிய உதயணனிருந்த தவதிசயந்தம் என்னும் மலையையணுகி; என்க.
 
(விளக்கம்) கடாஅய் - செலுத்தி. யானைமேல் ஒளிமழுங்கித் தோன்றும் ஆருணிக்கு முகிலிடை மறைந்து ஒளி மழுங்கித் தோன்றும் ஞாயிறு உவமை. சமழ்த்தன - ஒலி குன்றினவாய். படாகை - பெருங்கொடி. மாற்றோன் : உதயணன். மலை : தவதிசயந்தம்.