பக்கம் எண் :

பக்கம் எண்:522

உரை
 
3. மகத காண்டம்
 
27. பறை விட்டது
 
           கூற்றா யெடுத்த கோல விற்படை
           காற்றிசை மருங்கினுங் கார்த்துளி கடுப்பக்
           கடுங்கணை சிதறிக் கலந்துடன் றலைப்பெய
     100    நடுங்கின ராகி யுடைந்துபுறங் கொடுத்துப்
           பொறிப்படை புதைந்த குறிக்களம் புகலும்
           எண்டிசை மருங்கினு மியமரத் தொலியொடு
           விண்டோய் வெற்பொலி விரவுபு மயங்கி
           ஆர்ப்பிசை யரவமும் போர்க்களிற் றதிர்ச்சியும்
     105    கார்க்கட லொலியெனக் கலந்துடன் கூடித்
 
                   (போர் நிகழ்ச்சிகள்)
                 97 - 105 : கூற்றாய்.........கூடி
 
(பொழிப்புரை) பகைவர் உயிர்க்குக் கூற்றுவனாக எடுத்த அழகிய விற்படைகள் நான்கு திசைகளிலும் மழைத் துளிகளை ஒப்பக் கடிய கணைகளைச் சிதறாநிற்ப, ஒருவரோடு ஒருவர் சேர்ந்து எதிர்ப்ப, நடுங்கினவராய் உதயணன் மறவர்கள் ஆருணி மன்னன் படைக்கு உடைந்து புறங்கொடுத்து ஓடிப் பக்கத்திலே இயந்திரங்கள் புதைத்து வைக்கப்பட்டதும் முன்னர் உதயணனால் குறிப்பிடப்பட்டதுமாகிய களத்தை அடைதலும் அப்பொழுது எட்டுத் திசைகளிலும் இயமரத்தொலியோடு வானத்தைத் தீண்டுகின்ற மலைகளில் எழும் எதிரொலியும் ஒன்றொடொன்று கலந்து மயங்கா நிற்பவும், மறவர்களின் ஆரவாரத்தின் ஒலியும் போர்க்களிறுகளின் முழக்கமும் கரிய கடல் முழக்கம் போலக் கலந்து ஒன்று சேரா நிற்ப; என்க.
 
(விளக்கம்) பகைவர் உயிர்க்குக் கூற்றாய் என்க. உதயணன் மறவர்கள் நடுங்கிப் புறங்கொடுத்துக் குறிக்களம் புகலும் என்க, பொறி - இயந்திரம். இயமரம் - ஒரு வகைப் பறை. வெற்பொலி - மலையினின்றும் எழும் எதிரொலி. கூடி - கூட.