பக்கம் எண் :

பக்கம் எண்:527

உரை
 
3. மகத காண்டம்
 
27. பறை விட்டது
 
            பெய்கழ லாருணி பிறந்த நாளுட்
            செவ்வாய் விருச்சிகஞ் சென்றுமே னெருங்க
     135     ஆற்றல் சான்ற வடல்வே லாருணி
            ஏற்றோர் யாவ ரீண்டுவந் தெதிர்க்கெனச்
 
                    (ஆருணியின் கூற்று)
                133 - 136 : பெய்.........எதிர்க்கென
 
(பொழிப்புரை) வீரக்கழல் கட்டிய அந்த ஆருணி மன்னன், பிறந்தநாளும், செவ்வாய்க்கிழமையும், விரிச்சிக ஓரையும், ஒன்று கூடிச் செறிதலாலே போராற்றல் மிக்க கொல்லும் வேலையுடைய அந்த ஆருணிமன்னன் ''இங்கே என்னோடு எதிர்க்கத் தகுந்தோர் யார்? அவர் வந்து என்னோடு எதிர்த்திடுக!'' என்று அறைகூவ; என்க.
 
(விளக்கம்) ஒருவன் பிறந்த நாண்மீனும் செவ்வாய்க்கிழமையும் விரிச்சிகஓரையும் ஒன்றுகூடின் அவன் இறந்துபடுவன் என்பது கருத்து. பிறந்த நாள்மீன் (நட்சத்திரம்). ஏற்றோர் - தகுதியுடையோர்.