பக்கம் எண் :

பக்கம் எண்:531

உரை
 
3. மகத காண்டம்
 
27. பறை விட்டது
 
            வேற்று வேந்தனை வீழ நூறுதல்
            மாற்றா தெனக்கு மன்ன வருளெனக்
            கரும மாதல் காரணங் காட்டித்
            தரும தத்த னென்னுங் கடுந்திறல்
     160    அருமுரட் கலுழனி னார்த்துமே லோடிப்
            பொருமுர ணழிக்கும் புனைபடை பயிற்றி
            இமைப்போர் காணா விகற்றொழிற் றிரிவொடு
            பலர்க்குப் பதமின்றிப் பாஞ்சால ராயனைத்
            தனக்குப் பதமாகத் தலைப்பெய் தேற்றலின்
 
             (தருமதத்தன் ஆருணியரசனைக் கொல்லல்)
                  156 - 164 : வேற்று.........ஏற்றலின்
 
(பொழிப்புரை) உதயணன் கருத்தினைக் குறிப்பாலுணர்ந்து கொண்ட கடுந்திறலையுடைய தருமதத்தன் என்னும் அமைச்சன் உதயணனை வணங்கி, ''வேந்தே! நம்பகையரசனைக் கொல்லும் செயலை மறாது எனக்கு அருளுக'' என்று கூறி அச்செயல் தன் கடமையே யாதலுக்குக் காரணம் எடுத்துக்கூறி வெல்லுதற்கரிய வலிமையையுடைய கருடனைப்போல ஆரவாரித்து அவ்வாருணி மேலே விரைந்துசென்று பகைவனது போர்வலிமையைக் கெடுக்கும் படைக்கலங்களைக்கொண்டு கண் இமைத்துக் காண்பவர் மீண்டும் காணவொண்ணாத போர்த்தொழில் சுழற்சியோடு அவ்வாருணி மன்னன் உயிர் பிறர் மறவர்களுக்கு உணவாதலின்றித் தனக்கே உணவாகும்படி அவ்வாருணியை யணுகி அவனோடு எதிர்த்தலால்; என்க.
 
(விளக்கம்) வேற்று வேந்தன் - ஆருணி. மன்ன : விளி. தருசக மன்னன் தருமதத்தனை நோக்கி, ''நினக்கே அவனை நிறுத்துதல் கடன்'' என்று கூறினான். ஆதலின் தருமதத்தன் ஆருணியைக் கொல்லுதல் தன் கருமம் என்றான். கடுந்திறல் - அன்மொழி. கடுந்திறலையுடையோன் என்க. கலுழன் - கருடன். புனைபடை - தரித்துக்கொள்ளும் படைக்கலம். இமைப்போர் காணா என்றது சுழற்சியின் விரைவைக் குறித்து நின்றது. பதம் - உணவு.