உரை |
|
3. மகத காண்டம் |
|
27. பறை விட்டது |
|
165
வார்கவுள் வேழமும் வசத்த
தன்றியவன்
ஊர்வழிச் செல்லா தொல்குபு
நிற்றரக்
கூர்கெழு வச்சிரங் கொண்டு
வானவன்
கார்கெழு மாமலைக் கவினழித்
ததுபோற் றாரணி
மார்பன் யானையை வீழாக் 170
கனல்சொரி மலையிற் கவிய
நூறித் தார்கெழு
மார்புந் தலையுந் தகர
முடியணி யார முத்துநிரை
துளங்கத் தொடியணி
திண்டோ டுணிந்துநிலஞ்
சேரப்
பணிவில னெறிதலிற் படைக்கலஞ் சோரத்
|
|
(இதுவுமது)
165 - 174 : வார்கவுள்.........எறிதலின் |
|
(பொழிப்புரை) போகூழ் வலைப்பட்டிருந்த அவ்வாருணி
மன்னன் ஏறிவந்த நெடிய கவுளையுடைய யானையும் அவன் வயத்த தாகாமல் அவன் செலுத்தும்
வழியிற் செல்லாமல் தளர்ந்து நிற்றலைச்செய்ய, அப்பொழுது மாலையணிந்த மார்பினையுடைய
அத்தருமதத்தன் கூர்மைமிக்க வச்சிரப்படையைக் கொண்டு இந்திரன் முகில்கள் பொருந்திய
பெரிய மலையைச் சிறகரிந்து அழகழித்ததுபோல அந்த யானையைத் தன் படைக்கலத்தால்
சிதைத்து வீழ்த்தி அதன்மேலிருந்த அவ்வாருணி மன்னன் எரிமலை புரண்டு விழுந்தாற்போலப்
புரண்டு வீழும்படி தாக்கி அவனுடைய மாலைபொருந்திய மார்பும் தலையும் சிதைந்துபோகவும்,
முடிக்கலனிடத்து உள்ள முத்துமாலைகளின் நிரல் அசையவும் தொடியணிந்த திண்ணிய தோள்கள்
துணிபட்டு நிலத்தில் வீழவும், சிறிதும் காலந்தாழ்த்தலின்றித் தன் படைக்கலங்களால்
எறிதலால்; என்க. |
|
(விளக்கம்) ஊர்வழிச் செல்லாது - செலுத்தும் வழியிலே செல்லாமல். ஒல்குபு - ஒல்கி;
தளர்ந்து. நிற்றர - நிற்க. வானவன் - இந்திரன். மலையின் சிறகரிந்து
கவினழித்தல்போல் என்க மார்பன் : தருமதத்தன். வீழா - வீழ்த்தி. கனல் சொரிமலை
- எரிமலை. தகர- சிதைய. பணிவிலன் - காலம்
தாழானாய். |