பக்கம் எண் :

பக்கம் எண்:535

உரை
 
3. மகத காண்டம்
 
27. பறை விட்டது
 
           வரிகழ னோன்றாள் வருட காரன்
           இரியற் படையொ டியைந்தொருங் கீண்டிக்
           கொடிக்கோ சம்பிக் கொற்ற வாயில்
     195    அடுத்தனன் குறுகி யஞ்சன்மின் யாவிரும்
           வடுத்தீர் பெரும்புகழ் வத்தவர் கோமான்
           படுத்தனன் கண்டீர் பாஞ்சால ராயனை
           அடைத்தனிர் வையா தகற்றுமின் கதவென
 
                    (வருடகாரன் செயல்)
                  192 - 198 : வரிகழ.........என
 
(பொழிப்புரை) வரிந்து கட்டிய வீரக் கழலையுடைய வலிய முயற்சியையுடைய வருடகாரன் உதயணன் படைக்கு உடைந்தோடிய ஆருணியின் படைமறவரோடு கூடிக் கொடியையுடைய கோசம்பி நகரத்தின் வெற்றி பொருந்திய கோபுர வாயிலை எய்தி, ஆங்குள்ள மாந்தர்களை யணுகி, ''நகர் வாழ் மக்களே ! நீவிரெல்லாம் அஞ்சாதே கொண்மின் ! குற்றமற்ற பெரும்புகழையுடைய இவ்வத்தவ நாட்டு மன்னனாகிய உதயணன் நம்பகை மன்னனாகிய ஆருணியைக் கொன்றனன். ஆதலின் அவ்வுதயண மன்னனுடைய மறவரும் பிறரும் நுழைதற்பொருட்டு இக் கோபுரவாயிற் கதவுகளை அடைத்து வையாதேயுங்கள் ! திறந்து விடுமின்'' என்று கூறா நிற்ப, என்க.
 
(விளக்கம்) வரிகழல் : வினைத்தொகை. இரியற் படை - உடைந்தோடிய படை. இஃது ஆருணியின் படை. வடு - குற்றம். கோமான் : உதயணன். படுத்தனன் - கொன்றனன். கதவையடைத்து வையாது அகற்றுமின் என்க.