உரை |
|
3. மகத காண்டம் |
|
27. பறை விட்டது |
|
நகரத்
தாளர் புகரறக் கூறுவர் 200 தொல்வழி
வந்தவெம் பெருமக னெழுதிய
வெல்பொறி யோலை விடுத்தபி
னல்லது புகுதர
விடோமிந் நகர்வயின் யாமென
|
|
(நகர மாந்தர்
கூறுதல்)
199 - 202 : நகர.........என |
|
(பொழிப்புரை) அது கேட்ட அந் நகரப் பெருங்குடி
மக்கள் குற்ற மறக் கூறுபவர், ''ஐய ! தொன்று தொட்டு வழி வழி வந்த எம்மரசனாகிய
உதயண மன்னன் எழுதிய வெற்றியையுடைய இலச்சினையையுடைய ஓலையை எமக்கு விடுத்த பின்
திறப்ப தல்லது இப்பொழுது யாங்கள் இந்நகரத்தினுள்ளே பிறர் புகுதற்குக் கதவினைத்
திறந்துவிடேம்'' என்று கூறாநிற்ப ; என்க |
|
(விளக்கம்) நகரத்தாளர் - நகராட்சித் தலைவர்களுமாம். புகர் - குற்றம். நன்கு தெரிந்து
கொள்ளாமல் திறந்து விடுதல் குற்றமாகலின் அக்குற்றம் வாராமைப் பொருட்டுக் கூறுவர்
என்பார், புகரறக் கூறுவர் என்றார். தொல் வழி - தொன்று தொட்டுத் தொடர்ந்து
வருகின்ற மரபு எம் பெருமகன் என்றது உதயணனை. வெல்லோலை - வெற்றியை யுணர்த்தும் ஓலை.
பொறியோலை - இலச்சினையிட்ட
ஓலை. |