பக்கம் எண் :

பக்கம் எண்:539

உரை
 
3. மகத காண்டம்
 
27. பறை விட்டது
 
           இன்று மற்றிங் கிவன்றம ருளரெனிற்
           குன்றா ரவரைக் கோறு நாமெனக்
           கழிப்புறு வெள்வாட் டெழித்தன ருரீஇ
     215    ஒழுக்கஞ் சான்றோர் பிழைப்பில ரோம்ப
           மலைத்தொகை யன்ன மாட வீதியுட்
           சிலைப்பொலி தடக்கைச் சேதியன் வாழ்கென
           அலைகடல் வைய மறிய வெங்கும்
           பிறைமருப் பியானைப் பிணரெருத் தேற்றிப்
     220    பறைவிட் டன்றாற் பகைமுத லறுத்தென்.
 
                     (இதுவுமது)
            212 - 220 : இன்று.........அறுத்தென்
 
(பொழிப்புரை) பின்னரும் இன்றே இக் கும்பனுடைய உறவினர் இந்நகரத்தில் இருப்பாராயின், அவர் நம்பால் பகைமையிற் குறையார். ஆதலின், அவர்களையுந் தேடி யாம் கொன்று தீர்ப்பேம் ! என்று ஆரவாரித்து உறையினின்றும் உருவிய வெள்ளிய வாளை உடையவராய்ப் புறப்படாநிற்ப. அங்குள்ள நல்லொழுக்கம் நிரம்பிய சான்றோர் அம்மறவர்கள் அத்தகைய பிழையைச் செய்யாமல் அவரைப் பாதுகாவாநிற்ப, இவ்வாறு உதயணன் தன் பகைவனை வேரோடு களைந்து ஒழிப்ப, மலையின் தொகுதிகளைப் போன்று வானுற உயர்ந்து நிற்கும் மாடமாளிகைகளையுடைய அக் 'கொடிக் கோசம்பிக் கோநகரத்தின் வீதிகளில்' விற்றழும்பு கிடந்த பொலிவுடைய பெரிய கைகளையுடைய சேதியர் மன்னனாகிய உதயணன் நீடூழி வாழ்க ! என்று கூறி அலையையுடைய கடல் சூழ்ந்த இவ்வுலகமெல்லாம் அறியும்படி எங்கெங்கும் பிறை போன்ற மருப்பினையுடைய யானையினது சருச்சரையுடைய எருத்தத்தின் மேல் வெற்றிப் பறையை ஏற்றி, அறைவித்தனர் ; என்க.
 
(விளக்கம்) இவன் : இக்கும்பன். குன்றார் - பகைமை குறையார். அவரை - அவ்வுறவினரை. கோறும் - கொல்வேம். தெழித்தனர் - ஆரவாரித்து. உரீஇ - உருவி. பிழைப்பிலராய் ஓம்ப என்க. சிலை - விற்றழும்பு. சேதியன் : உதயணன். வையம் - வையகமாந்தர் : ஆகுபெயர். பிணர் - சருச்சரை. பறை - வெற்றிப்பறை. விட்டன்று - விடப்பட்டது.

                     27. பறை விட்டது முற்றிற்று.

               மூன்றாவது மகத காண்டம் முற்றுப் பெற்றது.