பக்கம் எண் :

பக்கம் எண்:54

உரை
 
3. மகத காண்டம்
 
4. புறத்தொடுங்கியது
 
         
     55    இயல்பிற் கெழீஇய வின்றுணைப் பிரிந்தோர்க்
           குயலரி தாக வூழூழ் கவற்றும்
           வயலுந் தோட்டமு மயல்பல கெழீஇய
           தாமரைச் செங்கட் டமனிய விணைக்குழைக்
           காமன் கோட்டத்துக் கைப்புடை நிவந்த
     60    இளமரக் காவி னிணைதனக் கில்லாத்
           தூபத் தொழுக்கத் தாபதப் பள்ளி
           தமக்கிட மாக வமைத்த பின்றை
 
                 (இதுவுமது)
          55 - 62 : இயல்பின்............பின்றை
 
(பொழிப்புரை) இயல்பாகத் தம்முள் காதலாலே பொருந்திய
  இனிய காதற்றுணைவரைப் பிரிந்து தனித்துறைவோர்
  உயிர்வாழ்தல் அரிதாகும்படி முறை முறையே மனக்கவலையை
  மிகுவித்தற்கிடனான முற்கூறிய வயல்களும் தோட்டங்களும்
  பலப்பல பொருந்தியதும் முற்கூறப்பட்ட செந்தாமரை மலர்போன்ற
  சிவந்த கண்களையும் பொன்னாலியன்ற இரண்டாகிய
  குழைகளையும் உடைய காமதேவன் கோயிலின் பக்கத்தே
  உயர்ந்துள்ள இளமரச் சோலையின்கண் அமைந்ததும் ஒப்பற்றதும்
  ஆகிய நறும்புகை கொடுத்து வழிபாடுசெய்யும் துறவோர்
  பள்ளியையே தாங்கள் கரந்துறைதற்கேற்ற இடமாகத் தேர்ந்து
  கொண்ட பின்னர் என்க.
 
(விளக்கம்) பறவைப் பாடலும் வண்டின் முரற்சியும் பிறவும்
  தனித்துறைவோர்க்குக் காமக் கிளர்ச்சியுண்டாக்கலான் உயலரிதென்ற
  படியாம் கோட்டம்-கோயில், கைப் புடை-அணித்தாய பக்கம் இணை
  தனக்கில்லாப் பள்ளி தாபதப் பள்ளி எனத் தனித்தனி கூட்டுக.
  தூபத் தொழுக்கம் - இறைவழிபாட்டுத் தொழில். பின்றை - பின்னை.