உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
1. கொற்றங்கொண்டது |
|
பகைமுத
லறுத்துப் பைங்கழ னோன்றாள்
வகைமிகு மான்றேர் வத்தவர்
கோமான் வருட
காரன் பொருடெரி
சூழ்ச்சி பொய்யாது
முடித்தலின் மெய்யுறத் தழீஇ 5
ஏறிய யானையுந் தன்மெய்க்
கலனும் கூறுபட
லின்றிக் கொடுத்தனன்
கூறி அறைபோ
மிவனென வாருணி
யுரைத்த குறையா
விழுப்பொரு ளன்றே கொடுத்துத்
|
|
(உதயணன் வருடகாரன்
முதலியோர்க்குச் சிறப்புச்
செய்தல்)
1 - 8 : பகை.........கொடுத்து
|
|
(பொழிப்புரை) சிலைப் பொறித்தடக்கைச் சேதியன் அலைகடல்
வையம் அறியத் தன் பகைவனை வென்று யானையின் எருத்தத்தில் வெற்றி முரசத்தை ஏற்றி,
நகரினும், நாட்டினும் வெற்றிச் செய்தியை அறைவித்தபின் பசிய வீரக் கழல் கட்டிய
ஆற்றன் மிக்க திருவடிகளையுடைய உயர் பிறப்புடைய குதிரை பூட்டிய தேரையுடைய அவ்வத்தவர்
கோமான், உறுதிப் பொருள்களை ஆராய்ந்து அறிதற்குக் காரணமான தன்னுடைய சூழ்ச்சியினைப்
பொய்யாது முடித்தலாலே, அவனை நன்கு மதித்து மார்போடணைத்துக்கொண்டு முகமன் பல கூறித்
தான் ஏறுதற்குரிய யானையையும் தன் உடம்பில் அணிந்திருந்த அணிகலன்களையும் ஒரு சேர
வழங்கிப் பின்னரும் தன் பகைவனாகிய ஆருணி மன்னன் இவ்வருடகாரன் என்னிடத்தினின்றும்
பிரிந்து தன்னிடத்தே வந்து கேண்மை கொள்ளுவன் என்று கருதி இங்ஙனம் கீழறுத்தற்
பொருட்டாக வழங்குவதாகக் கூறியிருந்த சிறந்த பொருள்களை யெல்லாம் அற்றை நாளிலேயே
வழங்கி; என்க.
|
|
(விளக்கம்) பகைமுதல் - பகையாகிய முதல் என்க; என்றது
ஆருணியை. வகை - பிறப்புவகை. மான் - குதிரை. வத்தவர் கோமான் : உதயணன். வருடகாரன்
: தருசகன் அமைச்சர்களுள் ஒருவன். சூழ்ச்சி - துணிந்த காரியம்: ஆகுபெயர். தழீஇ -
தழுவி. கூறுபடலின்றி - ஒரு சேர. முகமன்கூறி என்க. ஆருணி மன்னன் இப்பொருளை இவனுக்கே
வழங்கினால் இவன் உதயணனை வஞ்சித்து என்பால் வருகுவன் என்று கருதி வழங்குவதாகக்
கூறியிருந்த சிறந்த பொருள்களையெல்லாம் என்க. அறைபோதல் - வஞ்சித்துப் பிரிந்து
போதல்.
|