பக்கம் எண் :

பக்கம் எண்:541

உரை
 
4. வத்தவ காண்டம்
 
1. கொற்றங்கொண்டது
 
          தரும தத்தனைத் தோண்முதல் பற்றிப்
     10    பரும யானையொடு பாஞ்சால ராயனை
          வெங்களத் தட்ட வென்றி யிவையென
          நெய்த்தோர்ப் பட்டிகை யாக வைத்துப்
          பத்தூர் கொள்கெனப் பட்டிகை கொடுத்து
 
                  (இதுவுமது)
          9 - 13 : தரும...........கொடுத்து
 
(பொழிப்புரை) பின்னர்த் தருமதத்தன் என்னும் அமைச்சனை, மகிழ்ந்து நோக்கி அவனுடைய தோள்களைப் பற்றிக் கொண்டு, "அன்பனே ! நீ ஒப்பனையுடைய யானையோடு என் பகைவனாகிய ஆருணிமன்னனை வெவ்விய போர்க்களத்திலே கொன்று வீழ்த்திய வெற்றியின் பொருட்டு நினக்கு யான் வழங்கும் பொருள் இவைகாண்" என்று கூறி குருதிப்பட்டிகையாக இந்தப் பத்தூர்களையும் நீ ஏற்றுக்கொள்க என்று கூறிப் பட்டிகையும் எழுதிக்கொடுத்து; என்க.
 
(விளக்கம்) தருமதத்தன் : தருசகன் அமைச்சருள் ஒருவன். பாஞ்சாலராயன் - ஆருணிமன்னன். வென்றிக்கு இவை கைம்மாறு என்று என்க. நெய்த்தோர்ப் பட்டிகை - போர்க்களத்தே பகைவரை எதிர்த்து நின்று தங்குருதியை சிந்திக்கொள்ளும் வெற்றிக்குக் கைம்மாறாகச் செப்புப் பட்டயத்தில் எழுதி வழங்கும் முற்றூட்டு என்க. பட்டிகை - பட்டயம்.