பக்கம் எண் :

பக்கம் எண்:544

உரை
 
4. வத்தவ காண்டம்
 
1. கொற்றங்கொண்டது
 
           தாம மார்ப னாருணி தன்னோ
           டீம மேறா வியல்புடை யமைதியர்க்
           கேம மீத்த வியல்பின னாகிக்
           கழிந்தோர்க் கொத்த கடந்தலை கழிக்கென
     30    ஒழிந்தோர்க் கெல்லா மோம்படை சொல்லி
           வேறிடங் காட்டி யாறறிந் தோம்பி
 
                   (இதுவுமது)
               26 - 31 : தாமம்.........ஓம்பி
 
(பொழிப்புரை) வாகைமாலை புரளுகின்ற அவ்வுதயண மன்னன் தன் பகைவனாகிய ஆருணிமன்னன் தேவிமாருள் வைத்து உடன்கட்டை ஏறாமல் கைம்மை நோன்பினை மேற்கொண்ட தன்மையுடைய தேவிமார்களுக்கெல்லாம் சீவிதம் வழங்கும் கடமையை மேற்கொண்டவனாய்ப் பின்னரும் தன்சுற்றத்தாரை நோக்கி நம்போர்க்களத்திலே இறந்தொழிந்த மறவர்கட்கெல்லாம் அவரவர் தகுதிக்கேற்ப இறுதிக்கடன் செய்து முடிப்பீராக என்று கட்டளையிட்டு ஆருணியின் ஏனைய பரிசனங்கட்கெல்லாம் ஓம்படை மொழிகூறி, அவர் இனிது வாழ்தற்கு வெவ்வேறு இடங்களைக் காட்டி இவ்வாறு முறைமையறிந்து  அவ்வாருணியின் உறவினர்களையும் பரிவாரங்களையும் பாதுகாத்தருளியபின் ; என்க.
 
(விளக்கம்) மார்பன் : உதயணன். ஆருணிதன்னோடு ஈமம் ஏறா இயற்படை அமைதியர் என்றது. அவனோடு உயிர்விடாமல் கைம்மை நோன்பினை மேற்கொண்ட அவன் தேவிமாரை. ஈமம் ஏறுதல் - உடன்கட்டை  ஏறுதல். ஈமமேறா இயல்புடையமைதி என்றது, தாபத நிலையினை. இதனால் ஆருணிமன்னன் தேவியருள் சிலர் உடன்கட்டை ஏறினாரும் உளர் என்பது பெற்றாம். ஏமம் - பாதுகாப்பு என்றது, சீவிதப்பொருள் வழங்குதலை. கழித்தோர் - போரில் இறந்துபட்டவர். ஆறு - அரசியல் நெறி.