(விளக்கம்) பெருமகன் : உதயணன். வெங்கோல் வேந்தன் என்றது
ஆருணியை. வேற்று நாடு இஃது என்னுங் கருத்தால் நாட்டன்பின்றி என்றவாறு. தன்கோல்
என்றது தனக்கியல்பான கொடுங்கோல் என்பதுபட நின்றது. தவற்றின் - தவறான வழிகளில்.
புன்சொல் - பழிச்சொல். படுநுகம் - பெரிய அரசியற் சுமை; என்றது வரிச்சுமையை.
செங்கோல் ஓச்சி என்க. செங்கோலாவது - அரசனால் செய்யப்படும் முறையினது தன்மை.
அம்முறை ஒருபாற்கோடாது செவ்விய கோல் போறலின்
செங்கோலெனப்படும்.
"இயல்புளிக் கோலோச்சு மன்னவ
னாட்ட பெயலும் விளையுளுந் தொக்கு" -- குறள்,
545
என்னும்
பொன்மொழி பற்றிச் செல்வம் சிறப்பச் செங்கோலோச்சி என்றார். எடுப்பி -
உயர்த்தி. புதுவாழ்வளித்து என்றவாறு.
|